காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று (ஜன. 05) பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்தது. இன்று காலை நிலவரப்படி காஞ்சிபுரத்தில் 41.60 மிமீ, ஸ்ரீபெரும்புதூரில் 105.20 மிமீ, உத்திரமேரூரில் 21.20 மிமீ, வாலாஜாபாத்தில் 20 மிமீ, செம்பரம்பாக்கத்தில் 135.40 மிமீ, குன்றத்தூரில் 139.70 மிமீ என காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தமாக 463.10 மிமீ அளவு மழை பதிவாகியுள்ளது.
சராசரியாக 77.18 மிமீ மழை பதிவாகியுள்ளது. மாவட்டத்தில் அதிகபட்சமாக குன்றத்தூரில் 139.70 மி.மீட்டரும், குறைந்தப்பட்சமாக வாலாஜாபாத்தில் 20 மிமீ மழை பெய்துள்ளது.
கன மழையின் எதிரொலியாக ஏரிகளின் மாவட்டம் என்றழைக்கப்படும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டத்தில் பொதுப்பணித்துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ள 909 ஏரிகளில் 821 ஏரிகள் 100 சதவீத முழு கொள்ளளவை எட்டியுள்ளன.
மேலும் 83 ஏரிகள் 75 சதவீத கொள்ளளவையும், 5 ஏரிகள் 50 சதவீத கொள்ளளவையும் எட்டியுள்ளதாக பொதுப்பணித் துறையினர் தெரிவித்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெரிய ஏரிகளில் முதன்மையானதாக உள்ள தென்னேரி ஏரியின் 18 அடி ஆழத்தில் 1 டி.எம்.சி தண்ணீரை தேக்க முடியும். ஏரியின் முழு கொள்ளளவான 18.60 அடி வரையில் தற்போது நீர் நிரம்பி ஏரி முழு கொள்ளளவை எட்டி உபரி நீர் கலங்கல் வழியாக வெளியேறுகிறது.
ஸ்ரீபெரும்புதூர் ஏரி 17.60 அடி ஆழம் கொண்டதில் முழு கொள்ளளவை எட்டி உபரி நீர் வெளியேறுகிறது. அதேப்போல் பிள்ளைபாக்கம் ஏரியானது 13.20 அடி கொள்ளளவு கொண்டதில் தற்போது முழு கொள்ளளவை எட்டி, உபரி நீரானது கலங்கல் வழியாக வெளியேறி வருகிறது. இவ்விரண்டு ஏரிகளிலிருந்து வெளியேறும் உபரி நீரானது செம்பரம்பாக்கம் ஏரியில் கலக்கிறது.
தொடர் மழையினால் ஒருங்கிணைந்த காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: தேனியில் குடிமராமத்து பணிகளை தொடங்கிவைத்த துணை முதலமைச்சர்