காஞ்சிபுரம்: தூய்மைப் பணியாளர்கள் நகரை தூய்மையாக பரமாரிப்பதற்கு மட்டுமல்லாமல், குடியிருப்பு பகுதி சுகாதாரமாக இருப்பதற்கும் முக்கிய காரணமாக உள்ளனர். பெருவாரியான தூய்மைப் பணியாளர்கள் குப்பைகளை அகற்றுவதற்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி பிளாஸ்டிக் கவர்களை கைகளில் சுற்றிக்கொண்டும், சிலர் அது கூட இலலாமலும் பணியாற்றி வருகின்றனர். தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய அடிப்படை பாதுகாப்பு உபகரணங்களை முறையாக வழங்க வேண்டும் என்று தமிழகத்தின் பல பகுதிகளிலும் தூய்மைப் பணியாளர்கள் போராட்டங்கள் மூலமாக வலியுறுத்தி வருகின்றனர்.
இருந்த பொதிலும் அவர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்கள் முறையாக வழங்கப்படாத நிலையே உள்ளது. இந்த நிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சி நிர்வாகத்தின் அலட்சியப் போக்கால், தூய்மைப் பணியாளர்கள் குப்பைகளை தலையில் சுமந்து கொண்டு செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இது அங்கு பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கும் பணியில் பெரும் சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 12 ஆவது வார்டில், மதனபாளையம், அரசன் தோட்டம், சி.எஸ்.எம் தோப்பு போன்ற பகுதிகளில், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் நெசவுத்தொழிலை பிரதானமாகக் கொண்டவர்கள். இந்தப் பகுதியில் குப்பை சேகரிக்கும் மாநகராட்சியின் வாகனம், கடந்த சில மாதங்களாக பழுது அடைந்து இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்தப் பகுதியில் மட்டும் ஏழுக்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் குப்பைகளை சேகரித்து வருகின்றனர். வாகனம் பழுதுபட்டிருப்பதால், தற்போது குப்பைத் தொட்டிகளில் கொட்டப்படும் கழிவுகள் மற்றும் குப்பைகளை மூட்டையாகக் கட்டி, தங்கள் தலை மீது சுமந்து கொண்டு ஏறத்தாழ அரை கிலோ மீட்டர் தூரம் இந்த தூய்மைப் பணியாளர்கள் தூக்கிச் செல்வது காண்போரை வேதனையடைச் செய்கிறது.
அவ்வாறு குப்பைகளை தலையில் வைத்து சுமந்து செல்லும் தூய்மைப் பணியாளர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள் மற்றும் வயதானவர்கள். குப்பை மூட்டைகளை தலையில் சுமக்க முடியாத சில தூய்மைப் பணியாளர்கள், அவற்றை சிரமப்பட்டு சாலைகளில் இழுத்துச் செல்லும் பரிதாபமான காட்சியையும் காணமுடிகிறது. வரி வசூல் செய்வதில் கெடுபிடி காட்டும் மாநகராட்சி நிர்வாகம், பழுதுபட்ட குப்பை அள்ளும் வாகனங்களை சரி செய்து, இந்த துப்புரவுப் பணியாளர்களின் தேவையற்ற சுமையை குறைக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இது பற்றி ஆதங்கம் தெரிவித்த அப்பகுதி மக்கள், ”மாநகராட்சி நிர்வாகம்தான் நடவடிக்கை எடுக்கவில்லை என்றாலும், வார்டு கவுன்சிலர் உள்ளிட்ட அரசியல்வாதிகளும் இதைக் கண்டு கொள்ளாதது மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்துகிறது. தூய்மைப் பணியாளர்களும் சக மனிதர்கள் தான் என்பதை அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் உணர வேண்டும்.” என்று தெரிவித்தனர்.
இதையும் படிங்க: விமான விபத்தில் உயிரிழந்த மேஜர் ஜெயந்தின் உடல் சொந்த ஊரில் தகனம் செய்யப்பட்டது..