காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிரதமரின் சாலையோர வியாபாரிகளுக்கான ஆத்மநிர்பார் நிதி திட்டத்தின் கீழ் (PM SVANIDHI Scheme) கடன் வழங்கும் முகாம் காஞ்சிபுரம் காந்தி ரோடு பகுதியிலுள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடைபெற்றது.
![காஞ்சிபுரம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-kpm-04-collector-given-loan-orderto-roadside-vendors-pic-script-tn10033_02022021164501_0202f_1612264501_260.jpg)
இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் கடனுதவிக்கான ஆணைகளை வழங்கி பேசுகையில், “காஞ்சிபுரம் பெருநகராட்சி எல்லைக்கு உள்பட்ட பகுதிக்குள் பிரதமரின் சாலையோர வியாபாரிகளுக்கான ஆத்ம நிர்பார் (PM SVANIDHI Scheme) நிதி திட்டத்தின் கீழ் 711 சாலையோர வியாபாரிகள் பதிவு செய்யப்பட்டு, அடையாள அட்டை வழங்கி வங்கிகள் மூலம் ரூ.10,000 கடன் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுவருகிறது. இந்நிலையில் ரூ.5,000 கூடுதல் இலக்கு காஞ்சிபுரம் பெருநகராட்சிக்கு அரசால் நிர்ணயம் செய்யப்பட்டது.
அதன்படி 6,362 விண்ணப்பங்கள் பெறப்பட்டு இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டு பயனாளிகளின் வங்கி கணக்கு வைத்திருக்கும் கிளைகளுக்கு நகராட்சியால் அனுப்பப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில் முதற்கட்டமாக 774 விண்ணப்பங்கள் வங்கியால் அனுமதி அளிக்கப்பட்டு அதில் பயனாளிகளுக்கு கடன் உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
மீதமுள்ள பயனாளிகளுக்கு கடன் உதவிபெற்றுத்தர நகராட்சியால் எட்டு குழுக்கள் அமைக்கப்பட்டு துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் பஞ்சாப் நேஷனல் வங்கியில் மட்டும் கணக்கு வைத்திருக்கும் பயனாளிகள் 50 பேருக்கும் கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் சென்னை தெற்கு பஞ்சாப் நேஷனல் வங்கி துணை பொது மேலாளர் முகமது மக்சுத் அலி, முன்னோடி வங்கி மேலாளர் சண்முகராஜா, பெரு நகராட்சி ஆணையர் மகேஸ்வரி, பஞ்சாப் நேஷனல் வங்கி மூத்த மேலாளர் பீனா, சாலையோர வியாபாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: மதுபோதையில் சாலையோர உணவகத்திற்குத் தீவைப்பு: குற்றவாளிகளுக்கு வலை