காஞ்சிபுரம் அருகே மிலிட்டரி ரோடு பகுதியில் உத்தரமேரூர் தொகுதி மக்கள் நீதி மய்யம் கட்சியின் கூட்டணியில் உள்ள சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளர் சூசையப்பரை ஆதரித்து சமத்துவ மக்கள் கட்சியின் மாநில மகளிர் அணித் தலைவர் நடிகை ராதிகா சரத்குமார் இன்று பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில்,”இத்தனை ஆண்டுகளாக இரு திராவிட கட்சிகளும் அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை. திமுகவையும், அதிமுகவையும் திட்டிப்பேசி வாக்கு சேகரிக்க வரவில்லை. இரு கட்சிகளும் மாற்றி மாற்றி திட்டிக்கொள்வார்கள். திமுகவை அதிமுக திருடன் என்றும், அதிமுக திமுகவை திருடன் என்றும் கூறிக்கொள்கிறார்கள். ஆனால் இரண்டு கட்சிகளுமே நான் திருடவில்லை என்று கூறவில்லை.
காற்று, தண்ணீர், நிலக்கரி என அனைத்தையும் திருடிவிட்டு தற்போது நான் நல்லவன் என்றும்; 100 நாள்களில் மக்கள் பிரச்சினையை தீர்ப்பேன் என்றும் கூறுகிறார்கள். குடிநீர் வசதி, பெண்களுக்கென கழிப்பறை வசதி போன்ற அடிப்படை வசதி செய்யாமல் வாஷிங் மெஷின் கொடுப்பது எதற்கு? வாஷிங் மெஷின் பயன்படுத்தும்போது மின்சாரம் தடைபட்டால் வாஷிங்மெஷினை துணி துவைக்கப் பயன்படுத்தாமல் துணியை அடுக்கும் பணிக்குதான் பயன்படுத்தமுடியும்.
2 ரூபாய்க்கு விற்கப்படும் முகக்கவசம் அரசு மருத்துவமனையில் இலவசமாக தருவதில்லை. ஆனால், வாஷிங் மெஷின் கொடுப்பதையும் மக்கள் சிந்திக்க வேண்டும். இன்னும் ஆட்சிக்கே வராத திமுக பெண்களை இழிவுபடுத்தி பேசகின்றனர். மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடு இருளில் சென்றுவிடும்.
இரண்டு கட்சிகளும் ஆட்சிக்கு வந்தவுடன் செய்வேன் என்று ஏமாற்றி சென்றதை நினைவில் கொண்டு, ஏப்ரல் 6ஆம் தேதி வாக்கு இயந்திரத்திற்கு வாக்கை செலுத்துவதற்கு முன்பு, சிறிது நேரம் யோசித்து நமது வளர்ச்சிக்காக சிந்தித்து வாக்களிக்க வேண்டும்’ ’என ராதிகா சரத்குமார் வேண்டுகோள்விடுத்துப் பேசினார்.