காஞ்சிபுரம்: தமிழ்நாடு முழுவதும் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தமிழ்நாடு அரசு இரவு நேர ஊரடங்கினை அறிவித்துள்ளது.
மேலும், ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுப்போக்குவரத்தை நிறுத்தி அனைத்துக் கடைகளையும் அடைத்து முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்த உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் 3ஆவது வாரமாக ஞாயிற்றுக்கிழமையான இன்று (ஜன 23) முழு ஊரடங்கு உத்தரவு காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் ஆயிரத்து 100 காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
காஞ்சிபுரம் நகரில் முக்கிய சாலைகளான காந்தி சாலை, நெல்லுக்காரத் தெரு, ராஜ வீதிகள், காமராஜர் வீதி உள்ளிட்டப் பகுதிகளில் அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டு நகர் முழுவதும் வெறிச்சோடிக் காணப்படுகிறது. காஞ்சிபுரம் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் எம். சுதாகர் நகரின் முக்கிய சாலைகளில் திடீர் சோதனை மேற்கொண்டார்.
மேலும், தேவையின்றி சுற்றி வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல் துறையினருக்கு உத்தரவிட்டு வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்து முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதைத் கண்காணித்து வருகிறார். இன்று சுபமுகூர்த்த நாள் என்பதால் திருமணத்திற்குச் செல்லும் பொதுமக்கள் வாகனங்களை காவல் துறையினர், கண்காணித்து உரிய ஆவணங்களை சரி பார்த்து அனுப்பி வைக்கின்றனர்.
மேலும் அத்தியாவசியத்தேவையின்றி சுற்றித்திரிபவர்களுக்கு 200 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: Sunday Lockdown-ல் தூங்கிய தூங்கா நகரம்