காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் பகுதி, வாலாஜாபாத் சாலையில் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, ஒரு மினி வேன் ஒன்று வேகமாக அவர்களை கடந்து சென்றுள்ளது. அதை மடக்கி பிடிக்க காவலர்கள் முயற்சி செய்தபோது, அவர்களிடமிருந்து தப்பிக்கும் முயற்சியில் வேனில் இருந்தவர்கள், வாகனத்தை வேகமாக இயக்கி சென்றனர். இதனால், ஓட்டுநர் தன் கட்டுபாட்டை இழந்ததில் வாகனம் நிலைதடுமாறி அருகே இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.
அதில் வண்டியில் இருந்த ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. அதன் பின் வாகனத்தை சுற்றிவளைத்த காவல் துறையினர் வேனை சோதனை செய்தனர். அப்போது தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட பான்பராக் உள்ளிட்ட 30 லட்சம் மதிப்புள்ள போதை பாக்கு, புகையிலை உள்ளிட்ட பொருட்கள் இருந்தது தெரியவந்தையடுத்து மினி வேன், போதைப்பொருட்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். மேலும், வண்டியில் இருந்த நோபா ராம், கேதா ராம் ஆகிய இரண்டு பேரையும் கைது செய்தனர்.
அதையடுத்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதே பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 1 கோடி ரூபாய் மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்க: சென்னையில் கொள்ளையடித்துவிட்டு தப்ப முயன்ற வட இந்தியர்கள்: மடக்கிப் பிடித்த போலீஸ்!