வாசல்: தற்போதைய காஞ்சிபுரம் மாவட்டத்தில், இரண்டு மக்களவைத் தொகுதிகள் உள்ளன. சொந்த மாவட்ட சட்டப்பேரவைத் தொகுதிகளாக காஞ்சிபுரம், உத்திரமேரூர் ஆகிய பொதுத் தொகுதிகளையும், ஸ்ரீபெரும்புதூர் தனித் தொகுதியையும் கொண்டுள்ள காஞ்சிபுரம், அண்டை மாவட்டத்தில் இருந்து ஆலந்தூர் சட்டப்பேரவைத் தொகுதியை இரவல் பெற்று, நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளை கொண்டுள்ளது.
தொகுதிகள் வலம்:
காஞ்சிபுரம்: பட்டின் பெருமை தாங்கி நிற்கும், பல்லவ சாம்ராஜ்யத்தின் பழம்பெரும் தலைநகரம் காஞ்சி. காமாட்சி அம்மன், ஏகாம்பரநாதர் கோயில் என பிரசித்திப்பெற்ற பல கோயில்களையும் உடையது. விவசாயமும், பட்டு நெசவும் பிரதானமான தொழில்கள்.
கிணறு மற்றும் ஏரிப்பாசனத்தை நம்பி விவசாயம் நடைபெறுகிறது. பெரும்பாலான ஏரிகள் நீர்வரத்து கால்வாய்கள் தூர்வாரப்படவில்லை. விவசாயிகளைப் போல, நெசவாளர்களுக்கும் இலவச மின்சாரம் வழங்க வேண்டும், அண்ணா கைத்தறி பட்டுப் பூங்கா பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் தீர்க்கப்படாமல் தொடர்கின்றன.
உத்திரமேரூர்: பாலாறு, செய்யாறு, வேகவதி ஆறு நதிகளின் கரைகளை ஒட்டி அமைந்துள்ள தொகுதி. பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இங்கு குடவோலை முறையில் தேர்தல் நடந்துள்ளது. தொகுதியின் பிரதானத் தொழில் விவசாயம்.
இங்குள்ள முக்கிய நீராதாரமான உத்திரமேரூர் ஏரி நீர்வரத்துக் கால்வாய்கள் தூர்வாரப்படவில்லை. இதனால் மழைக்காலங்களில் ஏரிக்கு நீர் வருவதில் சிக்கல் நிலவுகிறது. இந்தத் தொகுதியின் மிகப்பெரிய பிரச்னை கல்குவாரிகள்.
கட்டுப்பாற்ற முறையில் இக்குவாரிகளிலிருந்து அதிக பாரம் ஏற்றிச்செல்லும் லாரிகளால் சாலைகள் சேதமடைவதும் விபத்துகளும் நடக்கின்றன. கனிம வளக்கொள்ளையைத் தடுத்து நிறுத்தி சுற்றுச்சூழலை பாதுகாத்திட வேண்டும் என கோரிக்கைகள் வைக்கின்றனர்.
ஸ்ரீபெரும்புதூர்: மாவட்டத்தின் தனி தொகுதியான இதன் முக்கிய தொழில் ஆதாரம் அங்கு செயல்பட்டு வரும் பன்னாட்டு நிறுவனங்கள். வெளிநாட்டினர், தென்மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் அதிகம் இந்த தொகுதியில் வசிக்கின்றனர்.
சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் இத்தொகுதியின் பெரும் பிரச்னையாகவுள்ளது. இதனைத் தவிர்க்க புதிய மேம்பாலங்களை அமைக்கவேண்டும் என்ற கோரிக்கைகள் நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. அரசு மருத்தவமனை தரம் உயர்த்தப் படவேண்டும்.
களநிலவரம்:
மாவட்டத்தின் மூன்று தொகுதிகளில் தனித் தொகுதியான ஸ்ரீபெரும்புதூரைத் தவிர மற்ற இரண்டு இடங்களும் திமுக வசமே உள்ளன. உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர் தொகுதிகளில் திமுகவுக்கும், அதிமுகவுக்கும் வெற்றிக்கான வாய்ப்புகள் இருக்கின்றன.
திராவிட முன்னேற்ற கழகத்தின் நிறுவனர்களில் ஒருவரான அண்ணாதுரை பிறந்த ஊர் என்பதால், காஞ்சிபுரத்தில் வெற்றி பெற வேண்டியத் தேவை திமுகவுக்கு. மக்கள் மனதில் ஏற்பட்டுள்ள மாற்றம், திமுகவுக்குள் நிலவும் வேட்பாளர்கள் தேர்வில் குழப்பம்; அதிமுகவின் வெற்றிக்கு அதிகம் வாய்ப்பளிக்கலாம்.
சமூக வாக்கு வங்கிகள் வெற்றிகளை தீர்மானிக்கும் தமிழ்நாட்டு அரசியல் களத்தில், மக்களுக்கு அதிகம் பரிட்சையமான வேட்பாளர்களை களம் இறக்கும் போது வெற்றிக் கணக்குகளில் மாற்றம் நடக்கலாம் என்கின்ற ஆரூட பட்சிகள்.