பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலில் மாசி மாதம் பிரம்மோற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. பிரம்மோற்சவ விழாவின் நான்காம் நாளான இன்று (பிப்.20) காமாட்சி அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் சூரியபிரபை வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்தார்.
திருவீதி உலா கோவிலில் இருந்து புறப்பட்டு சிறிது தூரம் சென்ற நிலையில் திடீரென சூரிய பிரபை வாகனத்தை தாங்கி வரும் தடியில் விரிசல் ஏற்பட்டது. சுவாமி தூக்கும் தடியில் விரிசல் ஏற்பட்டதை தொடர்ந்து சுதாரித்துக் கொண்ட சுவாமி தூக்கிவந்தவர்கள் உடனடியாக வாகனத்தை நிறுத்தினர். பின்னர், சூரிய பிரபை வாகனத்தில் இருந்து காமாட்சி அம்மனை இறக்கி வாகனம் ஏதுமின்றி வீதி உலா நடத்தி கோவிலுக்கு எடுத்துச் சென்றனர். இச்சம்பவம் பக்தர்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்ற ஆண்டு நடைபெற்ற பிரம்மோற்சவத்தின் போதும் சுவாமி தூக்கும் தடி உடைந்தது குறிப்பிடத்தக்கது. உலக பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் காமாட்சி அம்மன்கோவில் நிர்வாகத்தின் அலட்சியத்தால் ஆண்டுதோறும் பிரம்மோற்சவத்தின் போது சுவாமி தூக்கும் தடியில் விரிசலும், உடைப்பும் ஏற்படுவது காமாட்சி அம்மன் பக்தர்களுக்கு, அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: அதிகரிக்கும் யானை-மனித மோதல்கள்! காரணம் என்ன?