காஞ்சிபுரம்: மாவட்டத்தில் நடைபெறும் கரோனா தடுப்புப் பணிகளை சார் ஆட்சியர் சரவணன் ஆய்வு மேற்கொண்டார்.
காஞ்சிபுரம் பெருநகராட்சிப் பகுதியில் நோய்த் தொற்று அதிகரித்துவரும் நிலையில், அதைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்ட 380 நபர்களின் வீடுகள் முற்றிலுமாக தகர சீட்டுகளால் அடைக்கப்பட்டுள்ளன.
வைரஸ் பரவல் அதிகரித்துக் காணப்படும் பிள்ளையார்பாளையம் பகுதி, நடுத்தெரு, கிருஷ்ணன் தெரு உள்ளிட்ட 16 தெருக்கள் முற்றிலுமாக அடைக்கப்பட்டு, அங்கு வசிக்கும் மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களைக் கொண்டுசேர்க்கும் பணியில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
நகராட்சி ஊழியர்கள், சுகாதாரத் துறை ஊழியர்கள் என 300க்கும் மேற்பட்டோர் நகராட்சியின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள வீடு வீடாகச் சென்று பரிசோதனை செய்துவருகின்றனர். மூன்று நாள்களுக்கு ஒருமுறை மருத்துவ முகாம் நடைபெற்றுவருகிறது. இதனை சார் ஆட்சியர் சரவணன் ஆய்வு மேற்கொண்டார். பெருநகராட்சி ஆணையர் மகேஸ்வரி உடன் இருந்தார்.
மாவட்டத்தில் ஜூலை 8ஆம் தேதி வரை 2 ஆயிரத்து 970 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆரம்பக் காலத்தில் சென்னை எல்லைக்குட்பட்ட குன்றத்தூர், மாங்காடு, ஐயப்பன்தாங்கல் உள்ளிட்ட பகுதிகளில் தொற்று அதிகரித்துவந்த நிலையில், பத்து நாள்களுக்கும் மேலாக காஞ்சிபுரம் நகராட்சிப் பகுதிகளிலும் அதிகரித்துள்ளது.
தற்போது வரை காஞ்சிபுரம் நகராட்சிப் பகுதியில் 602 பேர் தொற்றால் பாதிப்படைந்துள்ளனர். அதில் 280 பேர் சிகிச்சை பெற்று பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மீதமுள்ள 322 பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.