தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், அஇஅதிமுகவின் பொதுச்செயலாளராக இருந்தவருமான மறைந்த ஜெயலலிதாவின் நான்காம் ஆண்டு நினைவுநாள் தமிழ்நாடு முழுவதும் இன்று (டிச. 05) அனுசரிக்கப்படுகிறது.
அதன் ஓர் பகுதியாக காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சரும், மாவட்டச் செயலாளருமான வி. சோமசுந்தரம் தலைமையில், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பேருந்து நிலையம், பூக்கடை சத்திரம், பெரியார் தூண், தேரடி, முத்தியால்பேட்டை, வாலாஜாபாத், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் திரு உருவப்படத்திற்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் மாலை அணிவித்து மலர்த்தூவி மரியாதை செலுத்தினர்.
பின்னர் பொதுமக்களுக்கும் கட்சித் தொண்டர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அதிமுக கழக அமைப்புச் செயலாளர்கள் வாலாஜாபாத் பா. கணேசன், மைதிலி திருநாவுக்கரசு, மாவட்ட அவைத் தலைவர் குண்ணவாக்கம் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணிச் செயலாளர் முத்தியால்பேட்டை ஆர்.வி. ரஞ்சித்குமார், மாவட்ட, ஒன்றிய, நகர முன்னனி நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்துகொண்டு ஜெயலலிதாவின் திருவுருவப் படத்திற்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்கள்.
இதையும் படிங்க: புரெவி புயல்: குருசடை தீவில் ரூ.20 லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதம்!