காஞ்சிபுரம்: வேலூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் IFS நிதி நிறுவனம், ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்தால் மாதம் 8 ஆயிரம் ரூபாய் அதிக வட்டி தரப்படும் என கூறி பல பேரிடம் பணம் பெற்று மோசடி செய்தது கூறப்பட்டது. இதுதொடர்பாக தமிழ்நாடு முழுவதும் 21 இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் இன்று (ஆக. 5) காலை முதல் திடீரென அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, காஞ்சிபுரம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் இன்று காஞ்சிபுரத்தில் மூன்று இடங்களில் அந்நிறுவனத்தின் தொடர்புடையவர்களின் வீடுகளிலும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். காஞ்சிபுரம் பச்சையப்பன் மகளிர் கல்லூரி அருகாமையில் உள்ள மின்மினி சரவணன் என்பவரது வீட்டில் ஐந்து பேர் கொண்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் பல மணி நேரமாக சோதனை மேற்கொண்டனர். இவர், IFS நிதி நிறுவனத்தின் காஞ்சிபுரம் கிளை இயக்குநராக உள்ளார். மேலும் அவரது வீட்டிற்கு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சீல் வைத்தனர்.
சமீபத்தில், நடந்த ஆருத்ரா பண மோசடி குற்றச்சாட்டை தொடர்ந்து, மீண்டும் ஒரு நிதி நிறுவனத்திற்கு தொடர்புடையவர்களின் வீடுகளில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனையிடுவது காஞ்சிபுரத்தில் பெரும் பரபரப்பையும், அதில் முதலீடு செய்தவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஒடிசா இளைஞர் கைது - 21 கிலோ கஞ்சா பறிமுதல்!