காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் செல்லப்பெருமாள் நகரில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஜான் (43) என்பவர் தனது மனைவி பிள்ளைகளோடு வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் சமையல் வேலை செய்து வந்துள்ளார்.
கடந்த 2 நாள்களுக்கு முன்பு அவர் கரோனா பரிசோதனை செய்துள்ளார். இன்று (மே.14) அவருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் காரணமாக தன் மனைவியுடன் ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார்.
ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனை நிர்வாகம், ஜானை இன்று போய் நாளை வாருங்கள் என்று சொன்னதாக கூறப்படுகிறது. ஆனால், அவர்களோ தங்களுக்கு சிறு குழந்தைகள் உள்ளதாகவும், அவர்களுக்கும் கரோனா தொற்று வந்துவிடக்கூடாது என்பதால் மருத்துவமனைக்கு வந்துள்ளதாகவும் கூறியுள்ளனர்.
இதனையடுத்து, மருத்துவமனை நிர்வாகம் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவரை தனிமைப்படுத்தாமல், மரத்தடியில் அமர செய்து கரோனா சிகிச்சை மையத்திற்கு அனுப்பி வைப்பதாக கூறிவிட்டு சென்றுள்ளனர். ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கரோனா தொற்று ஏற்பட்டவர் மரத்தடியிலேயே அமர்ந்திருந்தார்.
இதனையறிந்த மருத்துவமனைக்கு வந்த ஒரு சிலர், மருத்துவ பணியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.