செங்கல்பட்டு: திருப்போரூர் அடுத்த பஞ்சம்திருத்தி கிராமத்தைச் சேர்ந்தவர் தேவேந்திரன். இவர் தனது வீட்டு பணிக்காக அருகிலுள்ள மானாமதி பகுதிக்குப் பொருள்கள் வாங்கச் சென்றுள்ளார்.
இவரது மனைவியும் 100 நாள் வேலைக்குச் சென்று விட்டதால், தேவேந்திரனின் வயதான தாயார் மட்டும் வீட்டின் பின்பகுதியிலிருந்துள்ளார். இதனை நோட்டமிட்டிருந்த அடையாளம் தெரியாத நபர்கள் வீட்டிற்குள் நுழைந்து பீரோவிலிருந்த 6 லட்சம் ரூபாய் பணம், வெள்ளி பொருள்களைத் திருடிச் சென்றனர்.
இதனையடுத்து கடைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்த தேவேந்திரன், பீரோவில் இருந்த பணம் காணாமல் போனததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே அவர் இதுதொடர்பாக மானாமதி காவல்துறையினரிடம் புகார் அளித்தார்.
அப்புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், கைரேகை நிபுணரை வரவழைத்து தடயங்களை சேகரித்தனர்.
மேலும் திருடர்கள் வீட்டில் திருடிவிட்டு மோப்ப நாய் கண்டுபிடிக்காமல் இருப்பதற்காக, மிளகாய் பொடியை வீட்டில் தூவி விட்டு சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மகளுக்கு பாலியல் தொல்லை - தந்தை மீது புகார்