காஞ்சிபுரம்: ஒரகடத்திலிருந்து படப்பை நோக்கி கட்டட கலவை கலக்கும் எந்திரம் பொருத்தப்பட்ட கனரக வாகனம் ஒன்று அதிவேகமாக சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் முன்னே சென்றுக் கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருக்க ஓட்டுநர் சற்று கனரக வாகனத்தை வளைத்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச்சுவர் மீது மோதி எதிர் திசைக்கு கனரக வாகனம் சென்றது.
அந்த திசையில் வந்துக்கொண்டிருந்த இரண்டு கார்களின் மீது அடுத்தடுத்து பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.
இவ்விபத்தில் ஒரு காரை ஓட்டி வந்த ஓட்டுநர் கமல் (40) மற்றும் அக்காரில் பயணித்த டெல்லியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் சர்மா ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் மற்றொரு காரில் பயணித்த ஒரு குழந்தை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.
மேலும் இவ்விபத்தில் காரின் இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்த ஐந்திற்கும் மேற்பட்டோர் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இவ்விபத்து தொடர்பாக ஒரகடம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து உயிரிழந்தவர்கள் மற்றும் படுகாயமடைந்தவர்களின் விவரங்களை சேகரித்து வருகின்றனர். அப்பகுதியிலுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான பதைபதைக்க வைக்கும் காட்சிகளை கைப்பற்றி கனரக வாகனத்தின் ஓட்டுநரை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க:CCTV:கார் மோதியதில் தூக்கி வீசப்பட்ட இளைஞர் - பதறவைக்கும் சிசிடிவி காட்சி