காஞ்சிபுரம்: உத்திரமேரூர் - காஞ்சிபுரம் சாலையில் வெங்கச்சேரி - மாகரல் இடையே செய்யாற்றின் குறுக்கே தரைப்பாலம் அமைந்துள்ளது. சுமார் 60 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்தத் தரைப்பாலம் உத்திரமேரூர் - காஞ்சிபுரம் இடையேயான போக்குவரத்துக்கு மிக முக்கிய இணைப்பு பாலமாக உள்ளது.
இந்த நிலையில், கடந்த சில நாள்களாகப் பெய்துவரும் கனமழையால் (Heavy rain) பாலாறு, செய்யாற்றில் (cheyyar) வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. செய்யாற்றிலிருந்து 20 ஆயிரம் கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டுவருகிறது. உபரி நீர் தரைப்பாலத்தில் வழிந்தோடுவதால் முன்னதாகவே வலுவிழந்துள்ள தரைப்பாலம் மேலும் சேதமடைந்துள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தரைப்பாலத்தில் செல்ல பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகம் தடைவிதித்துள்ளது. இதனால் வாகனங்கள் திருமுக்கூடல் வாலாஜாபாத் வழியாகச் சென்றுவருகிறது.
வடகிழக்குப் பருவமழை முடிந்த பிறகு வெங்கச்சேரி செய்யாற்றின் குறுக்கே புதிய உயர்மட்ட பாலம் அரசு கட்டித்தர வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: 'சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கிடையாது; ஆனால்...' - பாலச்சந்திரன்