காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தாலுகாவுக்கு உட்பட்ட களியாம்பூண்டி கிராமத்தில் செயல்பட்டு வந்த தனியார் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் 43 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதையடுத்து, அவர்கள் அனைவரும் காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நேரில் பார்வையிட்ட அமைச்சர்
இந்நிலையில், இன்று (ஜுன் 28) இம்மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அக்குழந்தைகளை தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் பிபிஇ கவச உடை அணிந்துகொண்டு அவர்களது அறைகளுக்கே நேரில் சென்று நலம் விசாரித்தார்.
இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியம்,"உத்திரமேரூர் அருகிலுள்ள களியாம்பூண்டி தனியார் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்திலிருந்த கரோனா பாதிப்பு ஏற்பட்ட 43 பேரையும் இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தேன். அவர்களுக்கு சிறிய பாதிப்புகளே ஏற்பட்டுள்ளன. தற்போது, அவர்கள் அனைவரும் நலமுடன் உள்ளனர்.
3ஆவது அலையையும் சமாளிக்கலாம்
மேலும், சென்னையில் டெல்டா பிளஸ் பரிசோதனைக்கூடம் இன்னும் 20 நாட்களில் அமையவிருக்கிறது. மூன்றாவது அலை வருமா, குழந்தைகளை தாக்குமா என்பது விவாதத்துக்குரியதாகவே இருக்கிறது. முதல் அலை வந்தபோது படுக்கை வசதியும், இரண்டாவது அலை வந்தபோது ஆக்ஸிஜன் வசதியும் போதுமானதாக இல்லை.
தற்போது இவை அனைத்தும் அதிகப்படுத்தப்பட்டுள்ளன. 9 ஆயிரம் கிலோ லிட்டர் திரவ மருத்துவ ஆக்ஸிஜன் வசதியும், சுமார் 79 ஆயிரம் படுக்கைகளும் தயார் நிலையில் உள்ளன. மூன்றாவது அலை வந்தாலும் அரசால் சமாளிக்க முடியும்.
குழந்தைகளுக்கும் முக்கியத்துவம்
அரசு பொது மருத்துவமனைகளில் குழந்தைகளுக்கென தனியாக கரோனா சிகிச்சை மையங்களும் திறக்கப்படுகின்றன. தற்போது குழந்தைகளுக்கான படுக்கை வசதிகளும் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டவை தயாராக உள்ளது.
செங்கல்பட்டு தடுப்பூசி நிறுவனம்
செங்கல்பட்டில் உள்ள ஹெச்.எல்.எல் பயோடெக் தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனத்தில் கரோனா தடுப்பூசி மருந்து தயாரிக்க ஒன்றிய அரசிடம் அனுமதி கேட்டும், தொழில்துறை அமைச்சர் டெல்லியில் சென்று அனுமதி கேட்டும், இதுவரை அதற்கான சரியான முடிவு தெரியவில்லை.
ஒன்றிய அரசு அல்லது மாநில அரசு நடத்த அனுமதி அளித்தால் தமிழ்நாடு மட்டுமின்றி பிற மாநிலத்திற்கும் அங்கு தயாரிக்கப்படும் தடுப்பூசியை வழங்கலாம்" எனத் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறையின் இயக்குநர் குருநாதன், பொதுசுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம், காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம், சட்டப்பேரவை உறுப்பினர்கள் க.சுந்தர், சி.வி.எம்.பி.எழிலரசன் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்களும் உடன் இருந்தனர்.
இதையும் படிங்க: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் - எல்.முருகன்!