காஞ்சிபுரம் மண்டலம் தாம்பரம் கிளை அரசுப் போக்குவரத்து கழக ஊழியர்கள் சங்கம் சார்பாக தாம்பரம் போக்குவரத்து பணிமனை அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் வார விடுமுறையில் பணி செய்ய திட்டமிடுவதை நிறுத்த வேண்டும், குறைவான வசூல் காரணம் காட்டி பணத்தை வாங்காமல் தொழிலாளர்களை அலைகழிக்க வேண்டாம், விபத்தை காரணம் காட்டி ஓட்டுநர் உரிமத்தை பறித்துக்கொண்டு பணி வழங்க மறுக்கக்கூடாது, புதிய பராமரிப்பு ஊழியர்களை நியமித்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதில்100க்கும் மேற்பட்ட சி.ஐ.டி.யு தொழிலாளர்கள் கலந்துகொண்டு அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நந்தகோபால் (சி.ஐ.டி.யு, காஞ்சிபுரம் மண்டல பொது செயலாளர்) கூறுகையில், "தினசரி விபத்து என்பது கூடிக்கொண்டே போகிறது, ஆகையால் தேவையான பணியாளர்களை நிர்வாகம் நியமிக்கவேண்டும்" என்றார்.
மேலும், ஓய்வு பெற்ற தொழிலாளர்களை ரூ. 300 கூலிக்கு அழைக்கிறார்கள், இது ஒரு பொதுத்துறை நிர்வாகம் என்று மதிக்காமல் தனியார் துறை நிறுவனம்போல் நடத்திவருகின்றனர். இதை சி.ஐ.டி.யு அனுமதிக்காது என்று எச்சரிக்கை விடுப்பதாக அவர்கள் கூறினர்.
இதையும் படிங்க: பிப்.7இல் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்