காந்தி பேரவை அமைப்பின் சார்பில் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி, பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை அறிவிக்கக்கோரி, அடையாள உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ளப் போவதாக, அதன் தலைவர் குமரி அனந்தன் தெரிவித்தார்.
இதனை அடுத்து காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா நினைவிடத்துக்கு வருகை புரிந்த அவர் அங்குள்ள அண்ணாவின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார் .பின் செய்தியாளர்களிடம் பேசிய குமரி அனந்தன், " பேரறிஞர் அண்ணா திருக்குறளின் வழிகாட்டுதலின்படியும், அப்போதைய எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்றும் தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தினார். ஆனால் தற்போது அவரின் பெயரைக் கொண்டு ஆளும் அதிமுகவினர், வீதிகள் தோறும் மதுக்கடைகளைத் திறந்து மக்களை சீரழித்து வருகின்றனர். அதிமுக அரசுக்கு காந்தி பேரவை சார்பில் பூரண மதுவிலக்கை அறிவிக்கக் கோரிக்கை வைத்த நிலையில் அதை ஏற்க வில்லை. ஆகையால் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப்போராட்டம் மேற்கொள்ளப் போவதாக கூறினார்.