தமிழ்நாட்டில் கடந்த 2017ஆம் ஆண்டு குடிமராமத்துப் பணி திட்டம் 100 கோடி நிதி ஒதுக்கீடு செய்து ஆரம்பிக்கப்பட்டது. அதனடிப்படையில், காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் கிராமத்தில் குடிமராத்துப் பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து, காஞ்சிபுரம் மாவட்டத்தில் 45 ஏரிகள் 9 கோடியே 73 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்டது.
குடிமராமத்துப் பணிகள் மூலம் 8ஆயிரத்து 287 ஹெக்டேர் விளை நிலங்கள் பாசன வசதி பெற்றுள்ளன. இந்நிலையில், தற்போது மீண்டும் நான்காவது கட்டமாக குடிமராமத்து பணிகளை காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேற்கொள்ள தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் 17 கோடியே 31 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 32 ஏரிகளில் குடி மராமத்துப் பணிகளை தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அக்கம்மாபுரம் ஏரியில் நடைபெறும் குடிமராத்துப் பணியை காஞ்சிபுரம் ஆட்சியர் பா. பொன்னையா, ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ மதனந்தபுரம் கே.பழனி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இதன் பின்னர் ஆட்சியர் பொன்னையா செய்தியாளர்களிடம், "வரும் வடகிழக்கு பருவமழை காலத்திற்கு முன்பாகவே ஏரிகளில் குடிமராமத்து பணிகள் முடிக்கப்படும். ஸ்ரீபெரும்புதூர் ஏரியின் பாசன வசதி குறைவாக உள்ளதால் ஏரியை தூர் வாரி நீர் இருப்பு வைக்கும் நீர்த்தேக்கமாக மாற்றும் பணிகள் நடைபெறும்" என்றார்.
இதையும் படிங்க: 'எந்தெந்த தேதியில எங்கெங்க போனீங்கன்னு நீங்க மறக்கலாம்... ஆனா நான் மறக்க மாட்டேன்' - சொல்வது காவல் துறையின் ஐ ட்ராக்கர்