வேலூர் மாவட்டம், விஜி ராவ் நகரைச் சேர்ந்தவர் சின்னக்கண்ணு(65). இவர், காஞ்சிபுரத்திலுள்ள கதர் கிராமத் தொழில் வாரியத்தின் கண்காணிப்பாளராகப் பணிபுரிந்தார். இவர், பதவியில் இருந்தபோது போலியான கணக்கு எழுதி மோசடி செய்ததாக, துறை ரீதியான விசாரணைக்குப் பின்னர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட வணிக குற்றப் புலனாய்வு பிரிவு காவல் நிலையத்தில், வாரியத்தின் துணைப் பதிவாளர் சார்பில் கடந்த 2006 ஆம் ஆண்டு சின்னக்கண்ணு மீது மோசடி புகார் அளிக்கப்பட்டது. இப்புகாரின் அடிப்படையில், விசாரணை நடத்திய காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, சின்னக் கண்ணுவை கைது செய்தனர்.
இவ்வழக்கு காஞ்சிபுரம் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தபோது, சின்னக்கண்ணுவை கடந்த 2018 ஆம் ஆண்டு வழக்கிலிருந்து விடுதலை செய்து தீர்ப்பளித்தது.
33 ஆண்டுகள் கடுங்காவல் சிறை
இத்தீர்ப்பை எதிர்த்து அரசு தரப்பில் மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இவ்வழக்கில் அரசு தரப்பில் கூடுதல் அரசு வழக்குரைஞர் எஸ்.இளவரசு ஆஜரானார். இவ்வழக்கினை விசாரித்த காஞ்சிபுரம் மாவட்ட கூடுதல் நீதிமன்ற நீதிபதி கயல்விழி, நம்பிக்கை மோசடி, ஏமாற்றியிருப்பது, பொய் கணக்கு எழுதி போலியான ஆவணங்கள் தயாரித்தது உள்ளிட்ட குற்றங்கள் நிரூபிக்கப்பட்டதால், சின்னக்கண்ணுக்கு 33 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், 48 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நேற்று(டிச.16) தீர்ப்பளித்தார்.
கடந்த 2006ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் தொடரப்பட்ட இவ்வழக்கில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு 2020ஆம் ஆண்டு முடிவுக்கு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.