காஞ்சிபுரம் மாவட்டம் பிள்ளையார்பாளையம் குரு கோயில் அருகே ஒரகடம் பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி. இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். கடந்த ஜூன் 6ஆம் தேதி இரவு 2 மணியளவில் பணியை முடித்துவிட்டு அவரது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரது செல்போனை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனர். இது குறித்து பாலாஜி பெரிய காஞ்சிபுரம் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
இவ்வழக்கில் வழிப்பறிக் கொள்ளையர்களை விரைந்து கண்டுபிடிக்க காவல் துறையினர் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை பல்வேறு இடங்களின் தேடி வந்தனர்.
இந்நிலையில் சைபர் கிரைம் உதவியுடன் சென்னையில் பதுங்கியிருந்த பூந்தண்டலத்தைச் சேர்ந்த லோகநாதன் என்கிற லோகு (22), விருகம்பாக்கத்தைச் சேர்ந்த பிரசாந்த் (19), குன்றத்தூரைச் சேர்ந்த விவின் கேபா (19), இரண்டு சிறுவர்கள் என ஐந்து பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
இதையடுத்து, அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் தொடர்ந்து வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.
மேலும், அவர்களிடமிருந்து வழிப்பறி செய்யப்பட்ட செல்போன்கள், திருடபட்ட இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்த காவல் துறையினர், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.