காஞ்சிபுரம்: தமிழ்நாட்டில் ஏரி, நீர்நிலைகளிலுள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக கண்டறிந்து அதனை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உத்தரவிட்டிருந்தார்.
அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இதற்கென நடைபெற்ற கலந்து ஆலோசனை கூட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் இரா. பன்னீர்செல்வம் தலைமையில் ஏரி, நீர் நிலைகளிலுள்ள ஆக்கிரமிப்புகளைக் கணக்கெடுத்து மீட்பதற்கு குழு அமைக்கப்பட்டது.
கடந்த ஒரு மாத காலமாகப் பல்வேறு பகுதிகளில் ஆக்கிரமிப்பில் இருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்கள் மீட்கப்பட்டன.
இந்நிலையில் நேற்று (ஜன 22) காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அடுத்த மதுரமங்கலம் பகுதியில் சுமார் 5 ஏக்கர் ஏரி புறம்போக்கு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு விவசாயத்திற்குப் பயன்படுத்தப்பட்டு வந்தது குறித்து அலுவலர்களுக்குத் தெரியவந்தது.
இதையடுத்து காஞ்சிபுரம் மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் இரா. பன்னீர்செல்வம் தலைமையில் வருவாய் கோட்டாட்சியர், வருவாய்த்துறை அலுவலர்கள் அதிரடியாக களமிறங்கி ஆக்கிரமிப்பில் இருந்த 5 ஏக்கர் நிலத்தை மீட்டெடுத்தனர்.
மேலும், இந்த 5 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்திருந்தவர் பிரபல ரவுடி படப்பை குணா என்பதும், இதனுடைய தற்போதைய சந்தை மதிப்பு சுமார் 5 கோடி ரூபாய் எனவும் வருவாய்த்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் இரா. பன்னீர்செல்வம் தலைமையில் ஆக்கிரமிப்பாளர்கள் பிடியிலிருந்து மீட்கப்பட்ட ஐந்தாவது இடம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக கூறி ரூ.10 லட்சம் மோசடி: இளைஞர் கைது