புரெவி புயல் எதிரொலியாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு முதலே கன மழை பெய்து வருகிறது.
அதிலும், குறிப்பாக காஞ்சிபுரம் வாலாஜாபாத்தில் நேற்று நள்ளிரவு தொடங்கி இன்று (டிச.04) காலை வரை 22.60 மில்லி மீட்டர் மழை பெய்தது. மழை பெய்த காரணத்தினால் ஊத்துக்காடு ஏரி நிரம்பி உபரி நீர் வெளியேறியது.
இதன் எதிரொலியாக ஊத்துக்காடு பகுதியில் உள்ள ஜேஎஸ் நகரில் வெள்ள நீர் புகுந்தது. இதனால், அங்கு குடியிருந்த வெங்கடேசன் என்பவர் வீட்டைச் சுற்றி வெள்ள நீர் சூழ்ந்தது.
வீட்டைச் சுற்றி வெள்ள நீர் சூழ்ந்ததால் வீட்டில் குடியிருந்த மூன்று குழந்தைகள் உள்பட ஏழு பேர் வெளியே வர முடியாமல் சிக்கித் தவித்து வந்தனர்.
இதுகுறித்து பேரிடர் மேலாண்மை துறைக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, அவர்களை மீட்பதற்காக காஞ்சிபுரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த சென்ற காஞ்சிபுரம் தீயணைப்பு மீட்புக் குழுவினர் ரப்பர் படகை பயன்படுத்தி வீட்டில் இருந்த வெங்கடேசன், ராஜேஸ்வரி, சக்கரவர்த்தி, யமுனா மற்றும் வீட்டில் இருந்த மூன்று குழந்தைகள் உள்பட ஏழு பேரை பத்திரமாக மீட்டனர்.
இதையும் படிங்க: கனமழையால் டிரான்ஸ்பார்மர் வெடித்து விபத்து