பாமகவின் முன்னணி நிர்வாகிகளில் ஒருவரான சக்தி கமலாம்பாள் - பெருமாள் தம்பதியரின் 80ஆவது ஆண்டு சதாபிஷேக விழா காஞ்சிபுரத்தில் இன்று நடைபெற்றது. இதில், அக்கட்சியின் இளைஞரணி தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் பங்கேற்றார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், உள்ளாட்சித் தேர்தலில் தோல்வி பயம் காரணமாகவே திமுக மீண்டும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருப்பதாகவும், இந்தத் தேர்தலை நடத்தக்கூடாது என திமுக நினைப்பதாகவும் விமர்சித்தார்.
உச்சநீதிமன்றம் தெளிவாக தீர்ப்பளித்த பின், அதன்படி உள்ளாட்சித் தேர்தல் தேதியை மாநில தேர்தல் ஆணையம் மீண்டும் அறிவித்தது என்று குறிப்பிட்ட அன்புமணி ராமதாஸ், இந்தத் தேர்தலில் தங்களது கூட்டணி மிகப் பெரிய வெற்றிபெறும் என்றார்.
அதைத் தொடர்ந்து வெங்காய விலை உயர்வு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், மத்திய அரசின் காலதாமதம்தான் வெங்காய விலை உயர்வுக்கு காரணம். இருப்பினும் விலையைக் கட்டுக்குள் கொண்டுவர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்துவருகின்றன என்றார்.