காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உள்பட்ட ராஜகோபால் பூபதி தெருவைச் சேர்ந்தவர் அறிவழகன். அவருக்கு அமுதா என்ற மனைவியும் சவுமியா என்ற மகளும் சரண்சிங் என்ற மகனும் உள்ளனர். சரண்சிங் காஞ்சிபுரம் கீரை மண்டபம் அருகே டாட்டூ கடை வைத்து நடத்தி வருகிறார். மேலும் வணிகர் வீதி பகுதியில் அசைவ உணவகம் ஒன்றையும் நடத்தி வருகிறார்.
இவர் வீட்டுக்கு அருகே உள்ள விஷ்ணு என்பவர் குடும்பத்திற்கும் சரண்சிங் குடும்பத்திற்கும் கடந்த 3 தினங்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக நேற்று நள்ளிரவு இரவு விஷ்ணு தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து அறிவழகன் மற்றும் அமுதாவை தாக்கியதால் தகவலறிந்து தனது வீட்டிற்கு வந்த சரண்சிங் விஷ்ணுவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதில் ஆவேசமடைந்த விஷ்ணு மற்றும் விஷ்ணுவின் தாயார் சித்ரா தம்பி சிவா மற்றும் 3 நண்பர்களுடன் சேர்ந்து சரண்சிங் குடும்பத்தினரைக் கடுமையாகத் தாக்கினார். மேலும் கத்தரிக்கோல் மற்றும் ஸ்குரு டிரைவர் போன்ற கூர்மையான ஆயுதங்களைக் கொண்டு சரண் சிங் மற்றும் அவருடைய குடும்பத்தினரைக் குத்தினர்.
அதில் படுகாயமடைந்த சரண்சிங் மற்றும் அவருடைய குடும்பத்தினர் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அதன் பின் இதில் சிகிச்சை பலனின்றி சரண்சிங் உயிரிழந்தார். இதனிடையே, இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்து சிவகாஞ்சி காவல்துறையினர் நடத்திய முதல்கட்ட விசாரணையில் கொலை செய்த விஷ்ணு, கஞ்சா போதைக்கு அடிமையானவர் என்றும், வேண்டும் என்றே முன்பகை காரணமாகத் தனது நண்பர்களுடன் கஞ்சா புகைத்து சரண் சிங்கை கொலை செய்ய திட்டமிட்டிருந்தது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
மேலும் மூன்று தினங்களுக்கு முன்பு விஷ்ணு வீட்டில் வளர்ப்பு நாய் அதிகமாக சரண்சிங் வீட்டருகே சத்தமிட்டதாலும், விஷ்ணுவின் பாட்டி பாக்கு இடிக்கும் சிறிய உரலில் பாக்கு வைத்து இடிக்கும் போது ஏற்பட்ட சத்தங்களைத் தொடர்ந்து சரண்சிங் அவர்களிடம் வளர்ப்பு நாயை வேறு இடத்தில் கட்டி வைக்க வேண்டியதுதானே என்றும் ஏன் தேவையில்லாமல் எங்களுக்கு இடையூறு செய்கிறீர்கள் என விஷ்ணுவிடம் கேட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து தான் இந்தக் கொலை சம்பவம் நடைபெற்றதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக சிவகாஞ்சி காவல் ஆய்வாளர் விநாயகம் நேரில் விசாரணை செய்து கொலை செய்த விஷ்ணு அவருடைய தாயார் சித்ரா, தம்பி சிவா ஆகிய மூன்று பேர்களையும் கைது செய்து தொடர் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த சம்பவம் காஞ்சிபுரத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.