காஞ்சிபுர மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து அனைத்துத் துறை அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டம் அமைச்சர் உதயகுமார் தலைமையில் நடைபெற்றது. அப்போது அவர் பேசுகையில், ’காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழையால் பாதிக்கக்கூடிய 515 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அந்த இடங்களில் பணியாற்றுவதற்காக முதல் நிலை பணியாளர்களுக்கு உரிய பயிற்சியளிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளனர்.
பேரிடர் காலங்களில் அரசு அதிகாரிகள் 24 மணி நேரமும் மாவட்ட நிர்வாகத்துடன் தொடர்பில் இருப்பதற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. மேலும் மாவட்டத்தில் 264 ஏரிகள் தூர்வாரப்பட்டுள்ளன. வெள்ளம் ஏற்படாத வகையில் மாவட்டத்தில் ரூ. 428 கோடியில் பொதுப்பணித் துறை, ஊரக வளர்ச்சி துறை, நெடுஞ்சாலைத் துறை, பேரூராட்சி துறை மூலமாக பாலங்கள், சிறு பாலங்கள், மழைநீர் வடிகால் அமைத்தல், விரிவுபடுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதேபோல் ஒருலட்சத்து 47ஆயிரத்து 10 மணல் மூட்டைகள் மற்றும் ஒருலட்சத்து 73ஆயிரம் சவுக்கு மரங்கள் ஆகியவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. எனவே, வடகிழக்குப் பருவமழையை சமாளிப்பதற்கும், எதிர்கொள்வதற்கும் தேவையான அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன’ என்றார்.
இதையும் படிங்க:முல்லைப் பெரியாறு அணை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!