எதிர் வரும் தேர்தலில் பாஜக -அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெற வேண்டி காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா சுவாமி தரிசனம் செய்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நடக்கவிருக்கின்ற தேர்தல், தர்ம சக்திக்கும் அதர்ம சக்திக்குமான யுத்தம். கடந்த 10 ஆண்டுகளாக இந்து விரோதமாக செயல்பட்டு வந்த திமுக, கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறு காணொலி வெளியிட்டவர்களுக்கு உதவி செய்ய வழக்கறிஞரை அனுப்பியுள்ளது. இப்படி செய்யும் ஸ்டாலின் போன்றவர்கள் தேர்தலில் ஜெயிக்கவே கூடாது.
திமுகவை அரசியல் களத்தில் இருந்து அப்புறப்படுத்தினால்தான் இந்துக்கள் கவுரவமாக வாழ முடியும். மத்திய அரசின் திட்டங்கள் தமிழ்நாட்டிற்கு வரவேண்டும் என்றால் தீயசக்திகளான திமுகவும் திகவும் வரக்கூடாது. கரோனா காலத்தில் மத்திய, மாநில அரசுகள் சிறப்பாக செயல்பட்டுள்ளன. மத்திய அரசின் திட்டங்கள் போய் சேராத வீடுகளே இல்லை.
ஒரே சின்னத்தில் போட்டியிடுவதை திராவிட முன்னேற்றக் கழகம் செய்து கொண்டிருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலில் அதை திமுகவினர் செய்தார்கள். பெரும்பான்மை கிடைக்காமல் போய்விட்டால் தங்கள் கூட்டணியில் இருப்பவர்கள் தன்னுடைய விருப்பத்தை மீறக் கூடாது, கொறாடா உத்தரவை மீறக்கூடாது என்பதற்காக இப்படிச் செய்கிறார்கள்.
யாருக்கெல்லாம் சுய சிந்தனை, சுய கொள்கை இல்லையோ, அவர்கள் ஒரே சின்னத்தை ஒத்துக் கொள்கிறார்கள். ஒவ்வொரு முறையும் ஆட்சிக்கு வரும்போது ஒரு திட்டம் கொடுப்பவர்கள், அதிமுக, திமுக ஆட்சியில் நிலம் இல்லாதவர்களுக்கு நிலம் கொடுப்பதாகச் சொன்னார்கள், ஆனால் செய்தார்களா? திமுக சொல்லும் ஆனால் செய்யாது. 2006-2011 காலக்கட்டத்தில் பார்த்தோம். இது புதிதல்ல!
அதிமுக அரசாங்கம் சொன்னால் செய்யும். திமுக அரசு சொன்னால் செய்யாது. எனவே மக்கள் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க:வேட்பாளர் பட்டியலில் இடம்பெறாத அமைச்சர் நிலோபர் கபில் : தொண்டர்கள் கொந்தளிப்பு!