காஞ்சிபுரத்தில் உலகப்புகழ்பெற்ற ஏலவார்குழலி உடனுறை அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது. புகழ்பெற்ற இந்த திருக்கோயிலை பார்வையிட உள்நாடு, வெளிநாடுகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் வருவார்கள்.
இக்கோயிலுக்குச் சொந்தமான பல ஏக்கர் விளைநிலங்கள், இடங்கள் காஞ்சிபுரத்தைச் சுற்றியும், சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையிலுள்ள டெய்லர் சாலையிலும் ராயபுரம் பகுதியிலும் உள்ளன. கோயிலுக்குச் சொந்தமான இவ்விடத்தை இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் குறைந்த வாடகை, குத்தைக்கு குடியிருப்போர், வணிகம் செய்வோர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதில் குத்தகைதாரர்களாக இருப்பவர்கள் பல ஆண்டுகளாக கோயிலுக்கு முறையாக குத்தகை செலுத்துவதில்லை. பலமுறை இது குறித்து இந்து சமய அறநிலைத் துறை சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியும் வாடகை, குத்தகைப் பணம் முறையாகச் செலுத்துவதில்லை.
இது குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்து வழக்கில், வாடகை பாக்கி உள்ள நபர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு கோயில் வளாகத்தில் விளம்பரப்பலகை வைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது. இதனைத்தொடர்ந்து அறநிலையத் துறை சார்பில் நேற்று ஏகாம்பரநாதர் கோயில் வாயிலில் திருக்கோயிலுக்குச் சொந்தமான நிலங்கள், அதன் குத்தகைதாரர், செலுத்த வேண்டிய பாக்கித் தொகை உள்ளிட்ட விவரங்களைக் குறிப்பிட்டு பேனர்கள் வைத்தனர்.
அதில் குத்தகை பாக்கித்தொகை சுமார் 50 கோடி ரூபாய் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனைக்கண்ட பக்தர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினர். நாள்தோறும் பக்தர்கள் செலுத்தும் காணிக்கையை கொண்டே பூஜைகள், கோயில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக கூறப்பட்டவந்த நிலையில் இது பக்தர்களுக்கு பேரதிர்ச்சியாகவே இருந்தது.
இது குறித்து பேசிய பக்தர்கள், இதனை இப்படியே விடாமல் குறுகிய காலத்திற்குள் பாக்கித் தொகையை சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து வசூலிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்தனர்.
இதையும் படிங்க: எங்களை காப்பாற்றுங்கள்..! - எஸ்பியிடம் இளம்பெண் மனு!