தமிழ்நாட்டில் கரோனா தொற்று இரண்டாம் அலை வேகமெடுத்த நிலையில், மாநில அரசு ஊரடங்கு உத்தரவை மீண்டும் கடுமையாக்கி உள்ளது. அதன்படி, தமிழ்நாடு முழுவதும் வார நாள்களில் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் அறிவித்தது.
அத்தோடு, இன்று முதல் அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பக்தர்களை அனுமதிக்க வேண்டாமெனவும் உத்தரவிட்டுள்ளது. அதே நேரம் வழிபாட்டுத் தலங்களில் மரபுகள் மாறாமல் பூஜைகள் மட்டும் நடத்தவும் உத்தரவிட்டுள்ளது.
நகரேஷூ காஞ்சி என அழைக்கப்படும் காஞ்சிபுரத்தில் உலகப் பிரசித்திப் பெற்ற காஞ்சி காமாட்சி அம்மன் கோயில், ஏகாம்பரநாதர் கோயில், வரதராஜப் பெருமாள் கோயில் என பழமையும் பெருமையும் வாய்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட கோயில்கள் நிறைந்து உள்ளன.
கோயில்களின் நகரமாகத் திகழும் காஞ்சிபுரத்தில் உள்ளூர், வெளியூர், வெளிநாடு, வெளி மாநிலம் எனப் பல்வேறு பகுதிகளிலிருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்யவருவது வழக்கம்.
இந்நிலையில் அரசு உத்தரவின்படி, கோயில்களுக்குள் பக்தர்களை அனுமதிக்காமல் வாசல்கள் மூடப்பட்டுள்ளன. மேலும் கோயில் அர்ச்சகர்கள், ஊழியர்கள், முறைப்படி பூஜைகளை செய்துவருகிறார்கள்.
இதனால் சாமி தரிசனம் செய்ய வருகைதரும் பக்தர்கள், கோபுர வாசலிலேயே நின்று மனமுருகி பிரார்த்தனை செய்கின்றனர். கற்பூரம் ஏற்றி வழிபட்டு விட்டாலும்கூட சாமியை தரிசிக்க முடியாத சூழ்நிலையில் வேதனையுடன் திரும்பிச் செல்கின்றனர்.