காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தாலுகா சுங்குவார்சத்திரம் அருகே உள்ள சேந்தமங்கலம் கிராமத்தில் பி.ஜி. சேகர் என்பவருக்குச் சொந்தமான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தொழிற்சாலை இயக்கிவருகிறது. இந்தத் தொழிற்சாலை குடிநீரை நெகிழி பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்துவருகிறது.
2015ஆம் ஆண்டு முதல்முறையாக அரசின் அனுமதியைப் பெறாமல் நிலத்தடி நீரை எடுத்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விற்பனையை செய்துவந்துள்ளனர். இந்நிலையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை விற்பனை செய்யும் நிறுவனங்களை ஆய்வுசெய்து முறைப்படுத்திட வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி சேந்தமங்கலத்தில் உள்ள குடிநீர் தொழிற்சாலையில் ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் திவ்யஸ்ரீ தலைமையிலான வருவாய்த் துறையினர் திடீர் ஆய்வுமேற்கொண்டனர். ஆய்வின்போது முறையான ஆவணங்கள் ஏதுமின்றி அரசின் அனுமதி பெறாது, குறித்த குடிநீர் தொழிற்சாலை செயல்பட்டுவருவது தெரியவந்ததையடுத்து குடிநீர் தொழிற்சாலையை மூடி சீல்வைக்க ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் திவ்யஸ்ரீ வருவாய்த் துறையினருக்கு உத்தரவிட்டார்.
இந்த உத்தரவின்படி ஸ்ரீபெரும்புதூர் வட்டாட்சியர் ரமணி, வருவாய் ஆய்வாளர் அஞ்சலை ஆகியோர் குடிநீர் சுத்திகரிப்பு தொழிற்சாலையின் மின் இணைப்பைத் துண்டித்து, தொழிற்சாலையை மூடி சீல்வைத்தனர். மேலும் குடிநீர் தொழிற்சாலை நடத்துவதற்கு முறையான உரிமம் பெற்று அதற்கு உண்டான ஆவணங்களைச் சமர்பிக்கவும் வருவாய்த் துறை அலுவலர்கள் தொழிற்சாலை நிர்வாகத்திற்கு உத்தரவிட்டனர்.
2015ஆம் ஆண்டுமுதல் செயல்பட்டுவந்த குடிநீர் தொழிற்சாலைக்கு சீல்வைத்தது சுங்குவார்சத்திரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : ஏழை எளிய மக்களுக்கு விலையில்லா ஆடுகள் வழங்கிய அமைச்சர்