மத்திய அரசு குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றியுள்ளது. இம்மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து சைதாப்பேட்டையில் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து, அனுமதியின்றி சாலை மறியலில் ஈடுபட்டதாக உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினரை காவல் துறையினர் கைது செய்தனர்.
இதேபோல் காஞ்சிபுரம், கோவை, நாமக்கல், திருவாரூர், வேலூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் திமுகவினர் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக சார்பாக மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் எம்.கே.டி.கார்த்திக் தலைமையில் குடியுரிமை சட்ட நகலை கிழித்தெரியும் போராட்டம் நடைபெற்றது. இதில் ஈடுபட்ட சுமார் 1500 பேரை காவல் துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
வேலூர் மாவட்டத்தில் முன்னாள் திமுக பாராளமன்ற உறுப்பினர் முகமது சகி தலைமையில் அண்ணா கலையரங்கம் எதிரில் 50-க்கும் மேற்பட்ட திமுகவினர் கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை காவல் துறையினர் கைது செய்தனர். இதேபோல் நாமக்கல், திருவாரூர், கோவை போன்ற பகுதிகளிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனால் ஆங்காங்கே பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
இதையும் படிங்க:
குடியுரிமை மசோதாவை எதிர்த்து ஆர்ப்பாட்டம் - உதயநிதி ஸ்டாலின் கைது