காஞ்சிபுரம்: தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத்தை தோற்றுவித்தவருமான பேரறிஞர் அண்ணாவின் 114ஆவது பிறந்தநாள் விழா இன்று தமிழ்நாடு முழுவதும் மிக விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
அதையொட்டி காஞ்சிபுரத்தில், அண்ணா பிறந்து வளர்ந்த அவரது நினைவு இல்லத்தில் உள்ள அவரது திருவுருவச்சிலைக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் தமிழ்நாடு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர். எம். ஆர்த்தி, மாவட்ட வருவாய் அலுவலர் சிவருத்ரய்யா ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதேபோல் திமுக சார்பில் மாவட்டச்செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ, காஞ்சிபுரம் எம்.பி. ஜி.செல்வம், மாநில மாணவரணி செயலாளரும், காஞ்சிபுரம் எம்.எல்.ஏ சி.வி.எம்.பி எழிலரசன் மற்றும் கட்சி நிர்வாகிகளும் கலந்துகொண்டு மாலை அணிவித்து மலர்த்தூவி மரியாதை செலுத்தினர்.
இதேபோல் அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் தனித்தனியாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சரும், காஞ்சிபுரம் மாவட்ட செயலாளருமான வி.சோமசுந்தரம் தலைமையில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பேரறிஞர் அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மேலும் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான முத்தியால்பேட்டை ஆர்.வி.ரஞ்சித்குமார் திரளான ஆதரவாளர்களுடன் பேரறிஞர் அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.இந்நிகழ்வின் போது அண்ணாவின் நினைவு இல்லம் முன்பு பொது மக்களுக்கும், கட்சி நிர்வாகிகளுக்கும் திமுகவினரும், அதிமுகவினரும் இனிப்புகளை வழங்கி பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை வெகு விமரிசையாக கொண்டாடினார்கள்.
இதையும் படிங்க:காலை உணவுத் திட்டம்: சலுகை, தர்மம், இலவசம் என யாரும் எண்ணக்கூடாது - முதலமைச்சர் ஸ்டாலின்