காஞ்சிபுரம்: வடகிழக்கு பருவ மழை காரணமாக சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து அதிகமாகியுள்ளது.
ஏரியின் மொத்த கொள்ளளவான 3645 மில்லியன் கன அடியில் தற்போது 2862 மில்லியன் கன அடி நிரம்பி உள்ளது. இந்நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 24 அடியில் தற்போது 21.03 அடியை எட்டியதால் ஏரியின் பாதுகாப்பு கருதி 5 கண் மதகு கொண்ட 2 வது ஷட்டரில் நீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வந்தது.
கன மழை பெய்ய கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளதையடுத்து,ஏரியின் பாதுகாப்பு கருதியும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து வெளியேற்றப்பட்டு வந்த 100 கன அடி நீரின் அளவை இன்று முதல் 500 கன அடியாக உயர்த்த உள்ளதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் எம்.ஆர்த்தி அறிவித்திருந்தார்.
அதன்படி செம்பரம்பாக்கம் ஏரியின் ஐந்து கண் மதகில் மூன்றாவது ஷட்டர் இன்று(நவ-5) திறக்கப்பட்டது. அதற்கான பணிகளை பொதுப்பணித் துறையின் நீர்வளத்துறை அதிகாரிகள் மேற்கொண்டனர். தற்போது செம்பரம்பாக்கம் ஏரியில் ஐந்து கண் மதகில் 2வது மற்றும் 3வது ஷட்டர் வழியாக 500 கன அடி நீரானது வெளியேற்றப்பட்டு வருகிறது.
கரையோர கிராமங்களுக்கு எச்சரிக்கை:மேலும் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்படும் கால்வாயை ஒட்டியுள்ள கிராமங்களான சிறுகளத்தூர், காவனூர்,குன்றத்தூர், திருமுடிவாக்கம்,வழுதியம்பேடு, திருநீர்மலை மற்றும் அடையாறு ஆற்றின் இரு புறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும் மாவட்ட ஆட்சியர் எம்.ஆர்த்தி அறிவுறுத்தியுள்ளார்.
வடகிழக்கு பருவமழையை ஒட்டி செம்பரம்பாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் நேற்று (நவ-5)இரவு முதல் தற்போது வரை சற்று மழை ஓய்ந்திருந்தாலும், தொடர்ந்து வரும் நாட்களில் அதிக மழை வரும் பட்சத்தில் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து மேலும் அதிகமாகக் கூடும் போது நீர்மட்டம் மேலும் உயரும்.
இதன் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து திறந்து விடப்படும் நீரின் அளவை 500 கன அடியாக உயர்த்தி உள்ளதாகவும், 24 மணி நேரமும் கண்காணித்து வருவதாகவும் கால்வாய் தூர்வாரப்பட்டுள்ளதாலும், அடையாறு ஆற்றை தூர்வாரி, கரையை பலப்படுத்தி, 10 மீட்டர் அளவுக்கு அடையாறு ஆற்றை அகலப்படுத்தி உள்ளதாலும் ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவை உயர்த்தினால் கூட பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:பேரணியை ரத்து செய்தது ஆர்எஸ்எஸ் - கட்டுப்பாடுகளை காரணம் காட்டி முடிவு