காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் தாலுகாவிற்கு உட்பட்ட தேவரியம்பாக்கம் கிராமத்தில், ஜீவானந்தம் என்பவர் ஏ.எஸ்.என். கேஸ் ஏஜென்சி என்ற பெயரில் கேஸ் குடோன் நடத்தி வந்தார். இந்த குடோனில் இருந்து ஒரகடம் உள்பட சுற்றுவட்டார தொழிற்சாலைகளுக்கு வணிக ரீதியான கேஸ் சிலிண்டர்கள் சப்ளை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த செப்டம்பர் 28 அன்று மாலை இந்த குடோனில் திடீரென தீப்பிடித்தது. எதிர்பாராத விதமாக குடோனில் இருந்த கேஸ் சிலிண்டர்கள் வெடித்து சிதறியது.
இந்த விபத்தில் வீட்டின் அருகில் இருந்த கேஸ் குடோன் உரிமையாளர் ஜீவானந்தம், பூஜா (19), கிஷோர் (13), கோகுல் (22), அருண் (22), குணால் (22), சந்தியா (21), சக்திவேல் (32) , நிவேதா (21), தமிழரசன் (10), சண்முகப்பிரியன், ஆமோத்குமார் என மொத்தம் 12 நபர்கள் 90% தீக்காயங்களுடன் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்து சென்ற தீயணைப்புத்துறை மற்றும் காவல்துறை படுகாயமடைந்த அனைவரையும் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இவர்களில் ஏழு பேர் சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையிலும், ஐந்து பேர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கடலூர் மாவட்டம் பண்ருட்டியைச் சேர்ந்த ஆமோத்குமார்(22) என்பவர் கடந்த மாதம் 29 ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அதனைத்தொடர்ந்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கேஸ் குடோனின் நிர்வாக இயக்குனர் ஜீவானந்தத்தின் மகள் சந்தியாவும், கேஸ் குடோனின் நிர்வாக இயக்குனர் ஜீவானந்தமும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்த கேஸ் குடோனில் பணியாற்றி வந்த குடவாசல் பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் குணால் என்பவர் மிகுந்த தீக்காயங்களுடன் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (அக் 2) நள்ளிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த தீ விபத்தின் போது தேவரியம்பாக்கத்தைச் சேர்ந்த எட்டாம் வகுப்பு படித்து வந்த கிஷோர் (13) என்ற சிறுவன் டியூசன் முடித்து சாலையில் நடந்து சென்ற போது அச்சிறுவனுக்கு 80 சதவிகித தீ காயங்கள் ஏற்பட்டது. இவர் சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று (அக் 3) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். எனவே தற்போது வரை தேவரியம்பாக்கம் கேஸ் சிலிண்டர் தீ விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஏழு நபர்கள் தொடருந்து தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையும் படிங்க: தேவரியம்பாக்கம் சிலிண்டர் குடோன் தீ விபத்து - ஊராட்சிமன்ற தலைவர் அஜய்குமார் கைது