காஞ்சிபுரம்: உத்திரமேரூர் தாலுகா அலுவலகத்தில் துணை வட்டாட்சியராகப் பணிபுரிபவர், சதீஷ். இவர் காதலித்து திருமணம் செய்து கொண்ட தனது மனைவி சங்கீதா மற்றும் இரு குழந்தைகளுடன் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகேவுள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் குடியிருந்து வருகிறார்.
துணை வட்டாட்சியராகிய சதீஷ் மதுபோதைக்கு அடிமையாகி நாள்தோறும் குடித்துவிட்டு வந்து காதல் மனைவி சங்கீதா உடன் தகராறு செய்து வந்துள்ளார். தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்படும் நிலையில் சங்கீதா தனது தாய் வீட்டிற்கும் சென்று தங்கியுள்ளார்.
பின்னர் சதீஷ், மாமியார் வீட்டில் மன்னிப்புக்கேட்டு சமாதானம் செய்துகொண்டு மனைவியை தனது வீட்டிற்கு அழைத்து வந்தார். இந்நிலையில், நேற்றும் (ஆக. 16) தம்பதிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இந்நிலையில், சங்கீதா தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக காவல் துறையினருக்கும், உறவினர்களுக்கும் சதீஷ் தகவல் தெரிவித்துள்ளார்.
அதன்பின் காஞ்சிபுரம் தாலுகா காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சங்கீதாவின் உடலைக்கைப்பற்றி உடற்கூராய்வுக்காக காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், துணை வட்டாட்சியர் சதீஷிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருமணம் ஆகி 6 ஆண்டுகளே ஆகியுள்ள நிலையில் சங்கீதாவின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகக்கூறி சதீஷ் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி சங்கீதாவின் தாய் மற்றும் குடும்பத்தினர் புகார் அளித்ததன் பேரில் காஞ்சிபுரம் ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், தனது மகள் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக அவரது கணவர் நாடகமாடுவதாகவும், சங்கீதாவை அவரது கணவர் தான் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார் என சங்கீதாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதையும் படிங்க: காஷ்மீர் குடியிருப்புப்பகுதியில் சடலங்கள் அழுகிய நிலையில் மீட்பு