காஞ்சிபுரம்: செங்கல்பட்டு அடுத்த மணப்பாக்கம் கிராமத்தில் புகழ்பெற்ற கன்னியம்மன் கோயில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆடித்திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். கடந்த ஜூலை 21 ஆம் தேதி, கன்னியம்மனுக்கு சிறப்பு அபிஷேகத்துடன் ஆடித்திருவிழா தொடங்கியது.
இதனால் தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடத்தப்படுகின்றது. இந்நிலையில் கரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், மக்கள் அதிகம் கூடக் கூடிய கோயில்களை மூட தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.
பக்தர்கள் வருகை - கரோனா அபாயம்
அதன்படி பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் பக்தர்கள் வருகையை தடுக்கும் பொருட்டு, மணப்பாக்கம் கன்னிகோயிலில் ஆடிமாதம் முழுவதும் சுவாமி தரிசனம் செய்ய அனுமதியில்லை என மாவட்ட நிர்வாகம் அறிவித்தது.
இருப்பினும் நேற்று ஆடி மாத கடைசி வெள்ளியை முன்னிட்டு, நேர்த்திக்கடனை செலுத்துவதற்காக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரத் தொடங்கினர்.
கோயிலில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், கரோனா பரவலை சற்றும் பொருட்படுத்தாது பொங்கல் வைத்து வழிபடத் தொடங்கினர். இதனால் கரோனா பரவல் தொற்று அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சென்னை வந்த 3 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள்