காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 260ஆக உயர்ந்துள்ளது. அம்மாவட்டத்தில் நேற்று (மே 23) ஒரே நாளில், 11 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அம்மாவட்டத்தில் 249ஆக இருந்த தொற்று பாதிப்பு தற்போது 260ஆக உயர்ந்துள்ளது. இருப்பினும் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 148ஆக அதிகரித்துள்ளது.
மேலும், காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து தினம்தோறும் கோயம்பேடு சந்தைக்கு சென்று வந்த வியாபாரிகளுடன் தொடர்புடையவர்கள் மூலம் கரோனா பாதிப்புகள் அதிகரித்து வந்த நிலையில், தற்போது புதிதாக குன்றத்தூர், படப்பை, ஸ்ரீபெரும்புதூர் பகுதிகளில் வசித்துவரும் கோயம்பேடு சந்தையுடன் தொடர்புடைய மூவருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, ஒரகடம் பகுதியில் இயங்கிவரும் நோக்கியா சைமன்ஸ் தொழிற்சாலையில் பணிபுரிந்த எட்டு பேருக்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்ட நிலையில், கடந்த 18ஆம் தேதி தொடங்கி அத்தொழிற்சாலை காலவரையின்றி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
தொடர்ந்து தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த 50க்கும் மேற்பட்ட நபர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், இதுவரை 18 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : முகக் கவசம் அணியாமல் வருபவர்களுக்கு ரூ. 100 அபராதம்!