காஞ்சிபுரத்தில் தனியார் அரசு உதவி பெறும் ஆண்கள் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது.
இப்பள்ளி ஒழுக்கம் , படிப்பில் சிறந்து விளங்குவதால் காஞ்சிபுரத்தைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர்.
மாணவர்களைத் துன்புறுத்திய ஆசிரியர்
இந்நிலையில், கடந்த 10 தினங்களுக்கு முன்பு வகுப்பில் இருந்த பள்ளி மாணவன் ஒருவன், தனது கழுத்தில் ருத்ராட்சம் அணிந்திருந்ததைக் கண்ட வகுப்பு ஆசிரியர் அந்த ருத்ராட்சத்தை அகற்றச் சொல்லியும், பள்ளி மாணவர்கள் முன்பு அடித்தும், பிற மாணவர்களைக் கொண்டு மாணவனின் தலையில் குட்ட சொல்லியும் துன்புறுத்தியதாகத் தெரிகிறது.
இதனால், மனவேதனையடைந்த அவர் பள்ளி செல்ல விரும்பாமல், வீட்டிலேயே இருந்துள்ளார்.
இதேபோல், இன்னொரு மாணவனையும் மதரீதியாகத் துன்புறுத்தியுள்ளதாகத் தெரிகிறது.
இது குறித்து அம்மாணவர் தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து பாதிக்கப்பட்ட இரு மாணவர்களின் பெற்றோரும் பள்ளிக்குச் சென்று வகுப்பு ஆசிரியரை சந்தித்து நடந்தது குறித்து கேட்டனர்.
ஆனால், அவர் பெற்றோரையும் தரக்குறைவாக நடத்தியதாகக் கூறப்படுகிறது. மேலும், தலைமை ஆசிரியரை சந்திக்க அனுமதி கேட்டதற்கு மறுப்பு தெரிவித்துள்ளதாகவும் தெரிகிறது.
ஆசிரியர் மீது புகார்
இதனால் பெற்றோர் இது குறித்து முதலமைச்சரின் தனிப்பிரிவு, மாவட்ட ஆட்சியர், முதன்மை கல்வி இயக்குநர் ஆகியோருக்கு இணையதளம் மூலம் புகார் அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும், வகுப்பு ஆசிரியர் மீது அரசு தகுந்த நடவடிக்கை எடுத்து அவரைப் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் எனவும்; வருங்காலங்களில் இதுபோன்ற மத ரீதியான துன்புறுத்தல்கள் நடத்தக்கூடாது எனவும் பள்ளிக்கு எச்சரிக்கை விடுத்திட கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: மாணவனை காலால் உதைத்து தாக்கிய ஆசிரியர்: வைரலாகும் காணொலி