காஞ்சிபுரம் நசரத்பேட்டையில் இயங்கிவரும் பச்சையப்பன் ஆடவர் கல்லூரியில் வேதியியல் பிரிவு பேராசிரியராக பணிபுரிந்து வருபவர் தமிழரசன். இவர் கல்லூரி மைதானத்தில் கார் ஓட்டி பழகி வந்துள்ளார். அப்போது, அதே கல்லூரியில் பி.சி.ஏ இறுதி ஆண்டு பயின்று வரும் முருகன் காலனியைச் சேர்ந்த கல்லூரி மாணவி நந்தினி கல்லூரி மைதானம் வழியாக வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார்.
அச்சமயம் கல்லூரி மைதானத்தில் கார் ஓட்டி பழகி வந்த தமிழரசனின் கார் எதிர்பாராதவிதமாக மாணவி நந்தினி மீது மோதியது.
இதில், படுகாயமடைந்த கல்லூரி மாணவி சென்னை அரசு மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையில் விபத்து குறித்து அறிந்த கல்லூரி மாணவ மாணவிகள், விபத்தில் சிக்கி உயிருக்கு போராடும் மாணவிக்கு தனியார் மருத்துவமனையில் உரிய சிகிச்சை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கல்லூரி வகுப்புகளை புறக்கணித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.