காஞ்சிபுரம் பெருநகராட்சியில் 51ஆவது வார்டில் ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் சுமார் 500 பேர் பணியாற்றி வருகின்றனர். மாத ஊதியமாக 500 ரூபாய்க்கு பணியமர்த்தப்பட்டவர்கள் 20 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி தற்போது ரூ. 9 ஆயிரம் சம்பளத்திற்கு வேலைபார்த்து வருகின்றனர்.
இவர்களுக்கு கடந்த மூன்று மாதங்களாக ஊதியம் வழங்கப் படவில்லை என்று தெரிகிறது. இந்நிலையில், துப்புரவு பணியாளர்கள் தங்களுக்கு வரவேண்டிய மூன்று மாத ஊதியத்தை உடனே வழங்கக் கோரியும் தங்களை பணி நிரந்தரம் செய்யக் கோரியும் காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளனர்.
மேலும், அத்திவரதர் திருவிழாவில் இரவு பகலாக பணியாற்றியதற்காக தமிழ்நாடு அரசு ஊக்கத்தொகையாக ரூ.3 ஆயிரம் வழங்குவதாக அறிவித்திருந்தது. அறிவித்த ஊக்கத்தொகை தற்போது வரை அவர்கள் கைகளுக்கு வந்து சேரவில்லை. எனவே, நிலுவையில் உள்ள மூன்று மாத ஊதியத்தையும் ஊக்கத்தொகையையும் உடனடியாக வழங்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: துப்புரவு பணியாளர்களுக்கு இலவச பாதுகாப்பு உபகரணம்!