பெட்ரோல், டீசல் வாகனங்களில் இருந்து வெளியேறும் புகையால் சுற்றுச்சூழல் பெருமளவு பாதிக்கப்படுகிறது. இதனால், உலகம் முழுக்க பல்வேறு நாடுகளில் எரிபொருள் வாகனங்களுக்கு மாற்றாக மின்சார ஆற்றலில் இயக்க கூடிய வாகனங்களையே இயக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மின்சாரத்தில் இயங்கும் கார்கள் விற்பனைக்கு ஏற்ற சந்தைச் சூழலும் தற்போது இந்தியாவில் உருவாகியுள்ளது. சுற்றுச்சூழல் மாசினை கட்டுப்படுத்தவும், நாளுக்கு நாள் அதிகரிக்கும் பெட்ரோல், டீசல் விலையேற்றத்தால் மக்கள் எலக்ட்ரிக் கார்களை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
மக்கள் அதிகளவில் எலக்ட்ரிக் கார்களை பயன்படுத்துவதால் அதற்கான சார்ஜிங் நிலையங்கள் மிக குறைவாகவே உள்ளன.
இந்நிலையில் தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக காஞ்சிபுரம் காரைபேட்டை சென்னை -பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் ஈவி ட்ரோன் (EVtron) எனும் சார்ஜிங் நிறுவனம் மூலம் எலக்ட்ரிக் சார்ஜிங் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா இன்று (டிச.12) நடைபெற்றது.
இதனை தனியார் நட்சத்திர ஓட்டல் நிர்வாக இயக்குநர் பன்னீர்செல்வம் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில், 50க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் கலந்துகொண்டனர். இங்கு எலக்ட்ரிக் வாகனங்களை ஒரு மணி நேரம் சார்ஜ் செய்வதற்கு 140 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஒரு மணி நேரம் சார்ஜ் செய்தால் சுமார் 70 கிலோமீட்டர் வரை எலக்ட்ரிக் வாகனங்களல் பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மூன்று பலன்களுடன் வடிவமைக்கப்பட்ட சோலார் மிதிவண்டி! கல்லூரி மாணவர் அசத்தல்!