காஞ்சிபுரம்: செவிலிமேடு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் இன்று (ஜூலை.5) பேருந்து நிலையம் வந்து, பின் அங்கிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஆட்டோ ஒன்றில் சென்றுகொண்டிருந்தார்.
ஆட்டோவில் பயணிகள் யாரும் இல்லாதநிலையில், அப்பெண் ஜன்னல் ஓரமாக அமர்ந்து பயணித்துக்கொண்டிருந்தார். அப்போது ஆட்டோவைப் பின்தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், பெண்ணிடம் தங்க சங்கலியைப் பறிக்க முயன்றனர்.
மின்னல் வேகத்தில் பறந்த நகைத்திருடர்கள்
இதில் சுதாரித்து கொண்ட அப்பெண் கூச்சலிட்டுக் கொண்டே ஆட்டோவின் உள்பகுதியில் அமர்ந்தார். இதனையடுத்து இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் கூட்ட நெரிசலையும் பொருட்படுத்தாமல், அங்கிருந்து தப்பிச்சென்றனர்.
இதுகுறித்து காஞ்சிபுரம் தாலுகா காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்தத் தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முன்பு போக்குவரத்து சிக்னலில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளைக் கைப்பற்றி, அதன் உதவியோடு அந்த நபர்களைத் தேடி வருகின்றனர்.
இந்த நபர்கள் காஞ்சிபுரம் நகரில் பல்வேறு இடங்களில் செயின் பறிப்பில் ஈடுபட்டு இருக்கலாம் என காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர்.
பட்டப்பகலில் துணிச்சலாக ஓடும் ஆட்டோவில் பெண்ணிடம் செயின் பறிக்க முன்ற சம்பவம் பெரும்சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.