காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஸ்ரீ அத்திவரதர் வைபத்தின் 46ஆம் நாளான இன்று புஷ்பாங்கி சேவையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அத்திவரதரைக் காண நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்துவருகின்றனர்.
அத்திவரதர் தொடங்கிய நாள்முதல் 45ஆவது நாளான நேற்று வரை மட்டும் சுமார் 95 லட்சம் பக்தர்கள் இதுவரை சாமி தரிசனம் செய்துள்ளனர். இன்னும் ஒரு நாள் மட்டுமே பக்தர்கள் அத்திவரதரை சாமி தரிசனம் செய்ய முடியும் என்பதால் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்துவருகின்றனர்.
புஷ்பாங்கி சேவையில் அத்திவரதர் இந்நிலையில் இன்று மதியத்துடன் வி.ஐ.பி தரிசனம் முடிவடைகிறது. ஆடி கருடசேவை முன்னிட்டு பொது தரிசனம் மதியத்துடன் நிறுத்தப்பட்டு இரவு 8 மணிக்கு நடை திறக்கப்படும். இதனால் பக்தர்கள் இரவு 8 மணிக்கு மேல் பொது தரிசனத்தில் சென்று அத்திவரதரை தரிசனம் செய்யலாம்.
இதைத் தொடர்ந்து பக்தர்கள் சுமார் நான்கு மணி நேரமாக மூன்று கி.மீ. தூரத்தில் நின்று காத்திருந்து சாமி தரிசனம் செய்துவருகின்றனர். ஆகஸ்ட் 16ஆம் தேதி நாளையுடன் பக்தர்களுக்கு தரிசனம் அனுமதி நிறைவுபெறுகிறது. இதனால் பக்தர்கள் கூட்டம் அதிகமாகக் காணப்படுகிறது. மேலும், பக்தர்களின் கூட்டம் இன்று 1 கோடியைத் தொடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.