காஞ்சிபுரம் அத்திவரதர் தரிசனத்தின் 30ஆம் நாளான நேற்று நீல நிற பட்டாடை உடுத்தி பல்வேறு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நீண்ட வரிசையில் நின்றிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அத்திவரதரை தரிசித்துச் சென்றனர்.
ஆகஸ்ட் 1ஆம் தேதி (நாளை) முதல் அத்திவரதர் நின்ற கோலத்தில் காட்சியளிக்க உள்ளார். இதனால் தரிசன நேரம் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி இன்று மதியம் 12 மணிக்கு நடை அடைக்கப்பட்டு கோயில் உள்ளே வந்தவர்கள் மாலை 5 மணி வரை மட்டுமே அத்திவரதரை தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள். இதேபோல் வி.வி.ஐ.பி. பாஸ் வைத்துள்ளவர்கள் மாலை 3 மணிக்கு மேல் அத்திவரதரை தரிசனம் செய்ய அனுமதியில்லை.
மேலும் 3ஆம் தேதி ஆடிப்பூரத்தை முன்னிட்டு ஆண்டாள் திருக்கல்யாணம் நடைபெறவுள்ளதால் அன்று மதியம் 3 மணிக்குக் கோயில் நடை அடைக்கப்பட்டு உள்ளே வந்தவர்கள் மட்டும் மாலை 5 மணி வரை அத்திவரதரை தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள்.
திருக்கல்யாணம் முடிந்த பின்னர் இரவு 8 மணியிலிருந்து நள்ளிரவு வரை தரிசிக்கலாம். கடந்த 29 நாட்களில் 42 லட்சத்து 55 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர்.