காஞ்சிபுரம் அத்திவரதர் சிலை தரிசன விழா இம்மாதம் 1ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம்
48 நாட்கள் அத்திவரதர் தரிசனம் நடைபெறுகிறது. 18வது நாளான இன்றும் தரிசனம் தொடர்கிறது.
கடந்த 17 நாட்களில் 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தரிசனம் செய்துள்ள நிலையில் இன்று பக்தர்களின் கூட்டம் வழக்கத்தை விட அதிகமானதால் பக்தர்கள் ஒருவரை ஒருவர் முந்திக் கொண்டு செல்ல நிலை ஏற்பட்டு கூட்ட நெரிசல் ஏற்படுத்தியது.
இந்த கூட்ட நெரிசலில் சிக்கி சென்னையை சேர்ந்த நடராஜன் மற்றும் நாராயணி, சேலத்தை சேர்ந்த ஆனந்தன், ஆந்திர மாநிலம் குண்டூரையைச் சேர்ந்த கங்கா லட்சுமி உள்ளிட்ட பலர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்துள்ளனர்.
உடனே அவர்களுக்கு கோவில் வளாகத்தில் உள்ள தற்காலிக மருத்துவமனையில் அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் நான்கு பேரும் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இருவரும் மருத்துவமனை சென்ற பிறகு சிகிச்சைபலனின்றி இருவரும் உயிரிழந்தனர்.
கூட்ட நெரிசலில் சிக்கியதால் அவர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதுகுறித்து விசாரிக்க அம்மாவட்ட ஆட்சியர் பொன்னையா தனி குழு அமைக்க உத்தரவிட்டார்.
இதுகுறித்து சட்டப் பேரவையில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, "அத்திவரதர் வைபவத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 4 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும். இவ்வளவு கூட்டத்தை நங்கள் எதிர்பார்க்கவில்லை. திருப்பதியில் கூட 75 ஆயிரம் பேர்தான் தினமும் வருகின்றனர். ஆனால் அத்திவரதரை காண நாள் ஒன்றுக்கு ஒன்றரை லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்ய வருகின்றனர். உடல்நலம் குன்றியவர்கள் வரவேண்டாம்" என்றார்.