கோயில் நகரம் என்றழைக்கப்படும் காஞ்சிபுரத்தில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை பக்தர்களுக்கு காட்சிதரும் அத்திவரதர் வைபவம் ஜூலை 1ஆம் தேதி தொடங்கியது. இதற்காக கோயில் குளத்தின் அடியில் பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த அத்தி மரத்தாலான அத்திவரதர் சிலை பக்தர்களின் தரிசனத்துக்காக வெளியே கொண்டுவரப்பட்டது.
ஜூலை 1ஆம் தேதி தொடங்கி 48ஆவது நாளான இன்றுவரை அத்திவரதர் பக்தர்களுக்கு அருள்பாலித்துவருகிறார். 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை தரிசனம் என்பதால், பக்தர்களின் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருந்தது. ஜூலை 31ஆம் தேதி வரை சயனக் கோலத்தில் காட்சியளித்த அத்திவரதர், ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் நின்றக் கோலத்தில் காட்சியளித்துவருகிறார்.
அத்திவரதரை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி, அண்டை மாநில முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் உட்பட பல முக்கிய அரசியல் தலைவர்களும் ரஜினிகாந்த், நயன்தாரா உள்பட பல திரை பிரபலங்களும் தரிசனம் செய்தனர்.
இப்படி நாளுக்கு நாள் அத்திவரதரைக் காண பக்தர்கள் திரண்டு, நான்கு கி.மீ. துராம் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்துவருகின்றனர். இந்நிலையில், இன்று அத்திரவரதர் இளஞ்சிவப்பு, மஞ்சள் பட்டாடையில் ராஜகிரீடம் அணிந்து பக்தர்களுக்கு காட்சியளித்துவருகிறார். இன்றுடன் அத்திவரதர் தரிசனம் நிறைவடைய உள்ளதால், பக்தர்களின் கூட்டம் அதிகளவில் காணப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், காஞ்சிக்கு இன்று வரும் பக்தர்கள் அனைவரும் அத்திவரதரை தரிசித்த பின்பே வைபவம் நிறைவடையும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து நாளை ஆகம விதிப்படி, குளத்திற்குள் மீண்டும் அத்திவரதரை வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை கிட்டத்தட்ட 1 கோடியைத் தொட்ட பக்தர்களின் எண்ணிக்கை இன்று மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆடி மாதம் வெள்ளிக்கிழமை என்பதாலும், அத்திவரதரின் வைபவம் நிறைவுநாள் என்பதாலும் பக்தர்களின் கூட்டம் காஞ்சி நகரத்திற்குள் அலைமோதும் என்று அதற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
48 நாள்கள் காஞ்சிபுரத்தையே மிரளவைத்த வரலாறு காணாத பக்தர்களின் கூட்டமானது அத்திவரதரைக் காண மட்டுமே என்றால் அது மிகையாகாது. இப்படி பக்தர்களுக்கு அருள்பாலித்த அத்திவரதர் மீண்டும் நாளை குளத்திற்குள் செல்லவுள்ளதால் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருகின்றன.