காஞ்சிபுரம்: சென்னையின் புதிய இரண்டாவது விமான நிலையம், காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைக்கப்படவுள்ளது. குறிப்பாக பரந்தூர், ஏகனாபுரம், நாகபட்டு, நெல்வாய் உள்ளிட்ட 13 கிராமப்பகுதிகளில் இந்த புதிய விமான நிலையம் அமைப்பதற்கு நிலங்கள் கையகப்படுத்தப்படவுள்ளன.
இதற்கு எதிர்ப்புத்தெரிவித்து ஏகனாபுரத்தில் 73ஆவது நாளாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில், தினம்தோறும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அக்கிராம மக்களுக்கு ஆதரவு தெரிவிக்க, பல்வேறு கட்சித் தலைவர்கள் நேரில் சந்தித்தும், அவரவர்களின் கோரிக்கைகளை கேட்டு வருகின்றனர்.
அந்த வகையில், இன்று புரட்சி பாரதம் கட்சித்தலைவரும் சட்டப்பேரவை உறுப்பினருமான பூவை ஜெகன்மூர்த்தி, ஏகனாபுரம் கிராமத்தில் 73ஆவது நாளாகப்போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அக்கிராம மக்களைச் சந்திக்க ஏகனாபுரத்திற்கு வருகை தந்து, இக்கிராம மக்களிடையே கருத்துகளைக் கேட்டறிந்தார்.
அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பூவை ஜெகன்மூர்த்தி பேசுகையில், 'மூன்று போகம் பயிர் செய்யக்கூடிய விவசாய நிலங்களை அழித்து அங்கு விமான நிலையம் கட்ட வேண்டும் என அரசு நினைக்கிறது. எந்த அரசு வேலைகளிலும், கல்வியிலும் இல்லாமல் விவசாயத்தையே நம்பியிருக்கும் இந்த மக்களின் விவசாய நிலங்களை அரசு எடுத்துக்கொண்டால், வாழ்வாதாரம் என்ன ஆகும் என்று பதறிப்போய் இருக்கின்றனர்.
அறிவிப்பு வெளியாகி 73 நாட்களாக அனைத்துக்கிராம மக்கள் சாதிப்பாகுபாடு இன்றி, போராடி வருகின்றனர். தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கும் மக்களைச்சந்தித்து ஆறுதல் கூறவும்; மக்களிடம் விசாரித்து மக்களின் உணர்வுகளை எப்படி அரசிடம் கொண்டு செல்வதற்கு இங்கு வந்துள்ளேன். குறிப்பாக ஏகனாபுரம் ஊரையை காலி செய்ய வேண்டிய சூழ்நிலை இருக்கிறது.
புரட்சி பாரதம் கட்சி சார்பில் விவசாயத்தையே நம்பி இருக்கும் ஏகனாபுரம் பகுதியில் வாழும் மக்கள் மற்றும் விவசாய நிலத்தைத் தவிர்த்து, மற்ற இடங்களில் விமான நிலையம் அமைக்க அரசு கொள்கை முடிவை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறது.
வருகின்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இது குறித்து பேசியும், பரந்தூர் விமான நிலைய திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகள் குறித்துப்பேசியும் அரசின் கவனத்தை ஈர்ப்பேன். சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூட்டுவதற்கு முன்னரே இது குறித்து துறை அமைச்சர், முதலமைச்சரிடம், இக்கிராம மக்களின் உணர்வுகளை கோரிக்கையாக முன்வைத்து அவர்களை சந்திக்க உள்ளோம்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: "நச்சு அரசியல் சக்திகளுக்கு இடமளிக்கும் பேச்சுகளை தவிர்ப்போம்"- ஸ்டாலின்!