காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் நடிகரும், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் அவருடைய மனைவி ராதிகாவுடன் சாமி தரிசனம்செய்தார்.
இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, "நடைபெறவுள்ள 2021 தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சியின் நிலைப்பாடு குறித்து மாவட்ட நிர்வாகிகளுடன் வரும் ஜனவரி 22ஆம் தேதி முதல் 5 நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆலோசனை நடத்த உள்ளேன். அதன் பின்னர், தேர்தல் நிலைப்பாடு குறித்த அறிவிப்பு வெளியிடப்படும்" என்றார்.
பின்னர் ரஜினிகாந்த் அரசியல் நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்கியது குறித்து கருத்து தெரிவித்த அவர், "ரஜினிகாந்த் அவருடைய சொந்தக் கருத்தைப் பதிவுசெய்துள்ளார். அவருடைய அரசியல் நிலைப்பாடு குறித்து எந்தவித கருத்தையும் கூற விரும்பவில்லை. அவருடைய உடல் நலம் என்றும் சிறப்பாக இருக்க வேண்டும்.
அவருடைய கலை உலகப் பயணம் உள்ளிட்ட அவருடைய எந்த முயற்சியும் சிறப்பாக அமைய வேண்டும். தான் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றபோது, பிரார்த்தனை செய்த அனைத்து நல் உள்ளங்களுக்கும், சமத்துவ சொந்தங்களுக்கும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் கூறினார்.
நடிகை ராதிகா சரத்குமார் பேசுகையில், "சின்னத்திரை நடிகை சித்ரா எங்களுடன் பணியாற்றியுள்ளார். அவர் மிக தைரியமான பெண். ஏன் இவ்வாறு முடிவு எடுத்தார் எனத் தெரியவில்லை. விசாரணை நடைபெற்றுக் கொண்டிருப்பதால் அது குறித்துப் பேச விரும்பவில்லை" என்றார்.
இதையும் படிங்க: கரோனாவிலிருந்து மீண்ட சரத்குமார்: ஆம்பூரில் சிறப்பு பூஜை!