செங்கல்பட்டு மாவட்டம் ஈச்சங்கரணைப் பகுதியில் உள்ள மகரிஷி வித்யா மந்திர் பள்ளியின் ஆறாம் ஆண்டு விழா நடைபெற்றது. பள்ளியின் தாளாளர் உமாமகேஸ்வரி தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் பள்ளி முதல்வர் கணேசன் முன்னிலை வகித்தார், சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு குற்றப்பிரிவு காவல் துறை கூடுதல் இயக்குனர் ஷகீல் அக்தர் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
கலை நிகழ்ச்சிகளுக்கு பின்னர் மாணவர்களுக்கிடையே உரையாற்றிய ஏடிஜிபி ஷகில் அக்தர், "பள்ளி மாணவ மாணவிகள் தமிழ் கலாச்சார நிகழ்ச்சிகள் நடத்தியது பெருமைக்குரிய ஒன்றாகும். பள்ளியில் பயிலும் பருவத்திலிருந்தே அதிக அளவில் ஒழுக்கத்தைக் கடைபிடித்து முன்னோர் கூறிய எளிய முறையில் வாழ்வை பின்பற்ற வேண்டும், அப்போதுதான் வாழ்வில் பல உயரங்களை அடைய முடியும். அதுமட்டுமின்றி தமிழ்நாடு தலை நிமிர வேண்டும் என்றால் அதை கல்வியால் மட்டுமே உயர்த்த முடியும் எனவே அனைத்து துறைகளிலும் மாணவர்கள் ஈடுபாடு கொள்ளவேண்டும்" என்றார்.
தொடர்ந்து தமிழ் கலாச்சார விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஷகில் அக்தர் பரிசுகளையும் நற்சான்றிதழ்களையும் வழங்கி பாராட்டினார்.
நிகழ்ச்சியில் ஏராளமான மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: பல்வகை திறமைகளை மாணவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும் - துணைவேந்தர் பேச்சு