காஞ்சிபுரம் மாகாளியம்மன் கோயில் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ்வரன், காஞ்சிபுரத்திலுள்ள தனியார் சாயப்பட்டறையில் தினக்கூலியாகப் பணிபுரிந்துவந்தார். இவருக்கும், சென்னையைச் சேர்ந்த ராகினி என்பவருக்கும் கடந்த ஆண்டு ஜூன் 20ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பின்பு தனது மனைவியுடன் காஞ்சிபுரத்தில் விக்னேஷ்வரன் வசித்துவந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவரது மனைவி மகப்பேறுக்காக தாம்பரத்திலுள்ள தனது தாய் வீட்டுக்குச் சென்றுள்ளார்.
கடந்த 20ஆம் தேதி திருமண நாள் அன்று மனைவியுடன் இருக்க விரும்பிய விக்னேஷ், இ-பாஸுக்கு விண்ணப்பித்திருக்கிறார். ஆனால், அவருக்கு இ-பாஸ் கிடைக்கவில்லை. இன்னும் ஓரிரு நாள்களில் தனக்குக் குழந்தை பிறக்கப்போகிறது என்ற தகவல் கிடைத்ததும், மீண்டும் இ-பாஸுக்கு விக்னேஷ் விண்ணப்பித்தபோதும் அவருக்கு இ-பாஸ் மறுக்கப்பட்டுள்ளது. இதனால், அவர் மனமுடைந்தாகக் கூறப்படுகிறது.
இந்தச் சூழலில், நேற்றிரவு தனது வீட்டில் அவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இன்று காலை அவருடைய மனைவி பிரசவ வலியின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவலைக் கூறுவதற்காக, மனைவி வீட்டார் இவரைத் தொடர்புகொள்ள முயற்சிசெய்துள்ளனர்.
அப்போது அவரைத் தொடர்புகொள்ள முடியவில்லை. பின்னர், அருகில் இருக்கும் அவருடைய நண்பருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர் விக்னேஷ்வரனைப் பார்க்கச் சென்றுள்ளார். அப்போது விக்னேஷ் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த விக்னேஷின் நண்பர், இச்சம்பவம் குறித்து விக்னேஷ்வரனின் உறவினர்கள், காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.
விக்னேஷ்வரனின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு அனுப்பிவைத்த காவல் துறையினர், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். பிரசவத்தின்போது தனது மனைவியுடன் இருக்க எண்ணி, அது நிறைவேறாமல்போனதால் இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:தூக்கில் தொங்கிய நிலையில் பெண்ணின் சடலம்: கொலையா என விசாரணை